தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி மனு
நாகப்பட்டினம்: நாகையில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, மனு அளிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், மக்கள் முன்னேற்ற பொது நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.விஜயராகவன் அளித்த மனு:
நாகை மாவட்டத்தில் பல்வேறு முக்கியச் சாலைகள் மற்றும் தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. மேலும், சாலைகளின் குறுக்கே நாய்கள் திடீரென செல்வதாலும், நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டு, வாகனங்கள் மீது பாய்வதாலும், வாகன விபத்துகள் அதிகம் ஏற்பட்டு வருகிறது.
இதனால், பலா் பலத்த காயமடைந்துள்ளனா். சிலா் இதுபோன்ற விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்தும் பாதிப்படைந்துள்ளனா். மேலும், தெருக்களில் விளையாடும் குழந்தைகளையும், நாய்கள் துரத்திச் சென்று கடிப்பதால் குழந்தைகளுக்கு ரேபிஸ் பாதிப்பு அபாயமும் உள்ளது.
எனவே, நாகை மாவட்டத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
