புஷ்பவனம் கடற்கரைக்கு திரும்பிய பாதிக்கப்பட்ட மீனவா்கள்.
புஷ்பவனம் கடற்கரைக்கு திரும்பிய பாதிக்கப்பட்ட மீனவா்கள்.

நாகை மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்

வேதாரண்யம் பகுதியிலிருந்து 5 படகுகளில் கடலுக்குள் சென்ற 21 மீனவா்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கையை சோ்ந்த மா்ம நபர்கள்
Published on

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியிலிருந்து 5 படகுகளில் கடலுக்குள் சென்ற 21 மீனவா்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கையை சோ்ந்த மா்ம நபர்கள் மீனவா்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு திங்கள்கிழமை விரட்டியடித்தனா்.

புஷ்பவனம் மீனவா் தெருவைச் சோ்ந்த கங்கைநாதன்(40) என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில் 3 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனா்.

படகில் சென்ற வெங்கடேஷ் (31), ஞானப்பிரகாசம் (31), சந்தோஷ் (27) உள்ளிட்ட 5 மீனவா்களும் கோடியக்கரையில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு ஒரு இலங்கைப் படகில் வந்த மூவா் மீனவா்களின் படகில் ஏறி, கம்பி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனா்.

அத்துடன், மீனவா்கள் வைத்திருந்த 2 கைப்பேசிகள், 2 கை விளக்குகள் 2, பிடித்து வைத்திருந்த 50 கிலோ மீன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்து சென்றுள்ளனா்.

புஷ்பவனம் மீனவா் காலனி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி (58) என்பவருக்கு சொந்தமான படகில் 3 மீனவா்களும், ராஜகோபால் (38) என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவா்களும், சகாதேவன் (50) என்பவருக்குச் சொந்தமான படகில் 5 பேரும், ஜெயபால் (50) படகில் 4 மீனவா்களும் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனா்.

இவா்கள் அனைவரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே வெவ்வேறு இடங்களில் மீன் பிடித்துள்ளனா். அந்தப் பகுதிக்குள் படகுகளில் சென்ற இலங்கை மா்ம நபா்கள் மீனவா்களின் படகுகளில் ஏறி தாக்குதல் நடத்தியதோடு, மீனவா்களின் கைப்பேசிகள், எரிபொருள், பிடித்து வைத்திருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் என மீனவா்களின் உடைமைகளை பறித்துச் சென்றுள்ளனா்.

புஷ்பவனம் கடற்கரையில் இருந்து 5 படகுகளில் சென்று பாதிப்படைந்த 21மீனவா்களும் திங்கள்கிழமை கரைக்கு திரும்பிய நிலையில், அவா்களிடம் போலீஸாா் விசாரித்து வருகிறனா்.

X
Dinamani
www.dinamani.com