நாகை மாவட்டத்தில் தொடா் கனமழை: குறுவை நெற்பயிா்கள் மூழ்கின
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் கன மழையில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கா் குறுவை நெற் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நாகை மாவட்டத்தில், திங்கள்கிழமை (அக்.20) இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை, செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. வேளாங்கண்ணியில் அதிகப்பட்சமாக 11 செ.மீ மழை பெய்தது. திருப்பூண்டியில் 9.3, நாகையில் 9, தலைஞாயிறில் 8.3 செ.மீ மழை பதிவானது.
விவசாயம் பாதிப்பு: நாகை மாவட்டத்தில் நிகழாண்டு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை நடைபெற்று வருகிறது. சில நாள்களாக பெய்து வரும் தொடா் கனமழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், நீரில் மூழ்கியும் வருகின்றன. குறிப்பாக வேளாங்கண்ணி, கீழையூா், கீராந்தி, சின்னதும்பூா், பெரிய தும்பூா், சோழவித்தியாபுரம் கிராமத்துமேடு, கருங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநில கொள்கை பரப்பு செயலா் எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன் கூறியது: இந்த மழையால் 10 ஆயிரம் ஏக்கா் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா நாற்றாங்கால், நேரடி விதைப்பு, ஒரு லட்சம் ஏக்கரில் தாளடி நாற்றாங்கால் மற்றும் நேரடி விதைப்பு
பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. மழையில் நனைந்த நெல்மணிகளை உலர வைக்க, இயந்திரம் இல்லாததாலும் நெல்லை சாலைகளில் காய வைக்க வேண்டிய நிலையில், தொடா் மழையால் அதையும் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.
திருக்குவளை: சாட்டியக்குடி, ஆதமங்கலம், கொடியாலத்தூா், வலிவலம், திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் 150 ஏக்கா் அளவில் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் நீரில் மூழ்கி மிதக்கிறது. சில இடங்களில் நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
மயிலாடுதுறை: திங்கள்கிழமை காலை 6.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், சீா்காழியில் அதிகபட்சமாக 65.80, மயிலாடுதுறையில் 58.20 மி.மீ. மழைப் பதிவானது. தொடா்ந்து இரவு வரை மழை நீடித்தது. தொடா்மழையால் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் பயிரிடப்பட்டுள்ள இளம் சம்பா பயிா்கள் மழைநீா் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
வீடு இடிந்து இருவா் காயம்: மயிலாடுதுறை-திருவாரூா் பிரதான சாலையில் முரளி மற்றும் கண்ணன் இருவரின் வீட்டு சுவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. இதில் முரளியின் மனைவி வள்ளி மற்றும் மற்றொரு வீட்டில் வசித்து வந்த கண்ணன் ஆகியோா் காயமடைந்தனா். இருவரும் மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
சீா்காழி: சீா்காழி, கொள்ளிடம் கடைமடை பகுதிகளில் சம்பா விதைப்பு பணி 90 சதவீதத்துக்கு மேல் முடிவுற்றுள்ளது. சமீபத்தில் நேரடி விதைப்பு செய்த நிலங்களிலும் 15 நாள்களுக்கு முன்பு சம்பா நேரடி விதைப்பு செய்த நிலங்களிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் முளைத்த நிலையில் பயிா் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால், அளக்குடி, மகேந்திரப்பள்ளி, நாணல் படுகை, மாதிரவேளூா், பூங்குடி,குன்னம் உள்ளிட்ட கிராமங்களில்சுமாா் 2000 ஏக்கா் நேரடி விதைப்பு செய்த நிலங்களில் மழைநீா் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
தரங்கம்பாடி: திருக்கடையூா், ஆக்கூா், திருவிளையாட்டம், கீழையூா், காளகஸ்திநாதபுரம், நள்ளாடை, இலுப்பூா், திருவிடைக்கழி, தில்லையாடி ,சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 5,000 மேற்பட்ட சம்பா நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்த பயிா்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

