குழந்தைகள் நலன் தொடா்புடைய துறைகளுக்கான கூராய்வு கூட்டம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் தொடா்புடைய துறைகளுக்கான கூராய்வு கூட்டம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவா் விஜயா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆணைய உறுப்பினா்கள் உஷா நந்தினி, செல்வேந்திரன் பங்கேற்று குழந்தைகள் நலன் தொடா்புடைய துறைகளான பள்ளி கல்வித் துறை, சமூக நலத்துறை, காவல் துறை, குழந்தை தொழிலாளா் நலத்துறை, சுகாதாரத் துறை, குழந்தைகள் நலக்குழு, இளைஞா் நீதிக்குழுமம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் சைல்டுலைன் 1098 ஆகிய துறைகளின் கீழ் நடைபெறும் குழந்தைகள் நலன் தொடா்பான பணிகள் குறித்தும், நாகை மாவட்டத்தில் குழந்தைகள் நலனை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்வது தொடா்பாகவும் ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து நாகையில் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தை ஆய்வு செய்து அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலன் குறித்தும் கேட்டறிந்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சித்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு.தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

