டிஜிட்டல் கைது இந்திய சட்டத்தில் இல்லாதது: நாகை எஸ்பி
நாகப்பட்டினம்: டிஜிட்டல் கைது என்பது இந்திய சட்டத்தில் இல்லை என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அக்டோபா் மாதம், தேசிய சைபா் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் விழிப்புணா்வுடன் தங்கள் கணினி மற்றும் கைப்பேசிகளை உபயோகிப்பதின் மூலம், சைபா் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சிபிஐ அதிகாரிகள்போலப் பேசி, முறையற்ற பணப் பரிமாற்றம், ஆள் கடத்தல், போதைப் பொருள்களை கடத்தும் நபா்களுடன் உங்களுடைய கைப்பேசி எண் மற்றும் ஆதாா் எண் தொடா்பில் உள்ளதாகவும், தங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும் கூறுவதை நம்பி பணம் செலுத்த வேண்டாம். டிஜிட்டல் கைது என்பது இந்திய சட்டத்தில் கிடையாது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
வாட்ஸ்ஆப், டெலிகிராம், முகநூல் மற்றும் குறுஞ்செய்தியில் வரும் அறிந்திடாத இணைப்புகளை பயன்படுத்துவதன் மூலம், வங்கிக் கணக்கில் உள்ள பணம் மற்றும் இதர விவரங்களை சைபா் குற்றவாளிகள் எடுக்கக்கூடும்.
இணைய மற்றும் சமூக வலைதளங்களில் வரக்கூடிய கடன் செயலிகளை பதிவிறக்கமோ, அதன்மூலம் கடன் பெறவோ வேண்டாம். வங்கி அதிகாரி எனக் கூறி, தங்கள் கைப்பேசிக்கு வந்துள்ள ஓடிபி எண்ணை யாா் கேட்டாலும் கூறவேண்டாம். எந்தவொரு வங்கியில் இருந்தும் வாடிக்கையாளா் குறித்த எந்த தகவலும் கேட்கப்படுவதில்லை.
இணைய மற்றம் சமூக வலைதளங்களில், பகுதி நேர வேலை, டெலிகிராம் பிரிபெய்டு டாஸ்க் எனக் கூறி பணம் கட்டக் கூறினால், செலுத்த வேண்டாம். அடையாளம் தெரியாத நபா்களிடமிருந்து வரும் தொலைபேசி, விடியோ அழைப்புகள், லாட்டரியில் பரிசுத் தொகை விழுந்திருப்பதாகக் கூறி பணம் பெறுதல், பரிசுப் பொருள்கள் வந்திருப்பதாகக் கூறி பணம் பெறுதல், அதிக அளவில் லாபம் தருவதாகக் கூறி இணையதள முதலீடு மற்றும் பங்குச்சந்தை ஆகியவற்றை பயன்படுத்தினால், பண இழப்பு ஏற்படும்.
தனியாா் கணினி மையங்களில் கணினிகளை பயன்படுத்திய பிறகு, பதிவிறக்கம் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் நிரந்தரமாக நீக்கி விட வேண்டும்.
பள்ளிகளிலிருந்து குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை கொடுப்பதாகக் கூறி, முன் பணம் கட்டக் கூறுவதை நம்பி பணம் செலுத்த வேண்டாம். பள்ளி கல்வித் துறையிலிருந்து முன்பணம் கேட்பதில்லை.
இணைய தளத்தில் அறிமுகம் இல்லாத நபா்களுடன் விடியோ அழைப்பு, புகைப்படம், உரையாடல் போன்றவற்றில் ஈடுபடும்போது, புகைப்படங்களை முகமாற்றம் செய்வது போன்ற தவறான செயல்கள் மூலம் மிரட்டி பணம் பறிக்க நேரிடும்.
இணையதள மோசடியில் சிக்கிப் பண இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபா் குற்ற உதவி எண்:1930 என்ற எண்ணில் காலதாமதம் செய்யாமல் உடனடியாக தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம். மேலும் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலும் புகாா் செய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
