ஆயிரங்காளியம்மன் பூசை விழாவில் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி வியாழக்கிழமை தரிசனம் செய்தார்.
திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் பூசை விழா திங்கள்கிழமை இரவு பேழை திறப்பு, செவ்வாய்க்கிழமை இரவு வரிசை புறப்பாடு நடைபெற்றது. 2 நாள் தரிசனமாக புதன்கிழமை அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதல் நாளில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் தலைமைச் செயலர் மனோஜ் பரிதா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
இரண்டாம் நாளான வியாழக்கிழமை மாலை புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தரிசனம் செய்ய திருமலைராயன்பட்டினம் வந்தார். பின்னர் ஸ்ரீ ஆயிரங்காளியம்மனை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் சால்வை அணிவித்து, பிரசாதங்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் வி.நாராயணசாமி கூறியது: முதல் முறையாக ஆயிரங்காளியம்மனை தரிசனம் செய்ய வந்துள்ளேன். இந்த வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடையவேண்டும், பல்வேறு நிலையில் முன்னேற்றத்தை நோக்கி செல்லவேண்டும். மாநில மக்கள் நலமுடன் வாழவேண்டும். காரைக்கால் பல்வேறு நிலையில் வளர்ச்சியடையவேண்டும். குறிப்பாக வேலைவாய்ப்பு, சுற்றுலா என எல்லா துறைகளிலும் வளர்ச்சியடையவேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இவையாவும் ஆயிரங்காளியம்மன் அருளால் அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்றார் முதல்வர்.
முன்னதாக, அவரை மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன், சார்பு ஆட்சியர் ஆர்.கேசவன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் வி.ஜே.சந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.
முதல்வருடன் நலத்துறை அமைச்சர் எம்.கந்தசாமி, பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, பேரவை உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, கீதாஆனந்தன், பி.ஆர்.என்.திருமுருகன் உள்ளிட்டோரும் தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.