ஆயிரங்காளியம்மன் கோயில் பூஜை விழா: முன்னேற்பாடுகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் கோயில் பூஜை விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் கோயில் பூஜை விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபன் தலைமை வகித்தார்.
திருமலைராயன்பட்டினத்தில் 5 ஆண்டுகளுக்கொரு முறை ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் கோயில் பூஜை விழா நடைபெறுவது வழக்கம். வரும் ஜூன் மாதம் 5-ஆம் தேதி இரவு பேழையிலிருந்து (பெட்டி) அம்பாள் எழுந்தருளச் செய்வதும், 6-ஆம் தேதி ஆயிரமாயிரம் பொருள்களுடன் வரிசை வீதிவலம் செல்வதும், 7-ஆம் தேதி அதிகாலை பெரும் தளியல் போடப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். 7 மற்றும் 8 ஆம் தேதி  இரண்டு நாள்கள் அம்பாளை திரிசிக்க முடியும். பின்னர் அம்பாள் பேழையில் ஸ்தாபிக்கப்படும். இவ்வகையில் திருவிழா நடத்தப்படவுள்ளது.
இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்துகொள்வர். இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் வரக்கூடிய பக்தர்களுக்கு வசதிகள் செய்துத்தரும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் அரசுத்துறை அலுவலர்களுடன் புதன்கிழமை நடத்தப்பட்டது.
விழா குறித்து ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் நிர்வாகக் குழுத் தலைவர் சுப்பு முதலியார், செயலர் சண்முகநாதன் உள்ளிட்டோர் ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு விளக்கிக் கூறினர்.
வரிசை புறப்படும் நாள் முதல் விழா காலமான 8-ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் சிறப்பு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும். தடையில்லா மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம்  இருக்க வேண்டும். தீயணைப்பு வாகனம் விழா காலத்தில் நிறுத்த வேண்டும். சிறப்பு மருத்துவ சேவை  மையம் அமைக்க வேண்டும். பக்தர்களுக்கு பாதுகாப்பு  தரும் வகையிலும், நெரிசல் ஏற்படாத வகையிலும் காவல்துறையினர் பங்களிப்பு இருக்க வேண்டும். குப்பைகள் சேராத வகையிலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் அரசுத்துறையினர் ஈடுபட வேண்டும்.
விழாவில் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை அரசுத் துறையினர்  எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஆட்சியர் ப. பார்த்திபன் அறிவுறுத்தினார்.
மாவட்ட சார்பு ஆட்சியர் ஆர். கேசவன், மண்டல  காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து,  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜி. இளஞ்செழியன், நலவழித்துறை துணை இயக்குநர் பி. நாராயணசாமி, அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி. சித்ரா, மின் துறை  செயற்பொறியாளர் ராஜேஷ்சன்யால், உள்ளாட்சித்  துறை துணை இயக்குநர் மகாலிங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறையினர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com