காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கு நெல் தரிசில் பருத்தி சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி ராசி விதைகள் நிறுவனத்துடன் இணைந்து செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் கா. மதியழகன் தலைமை வகித்துப் பேசினார்.
வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெ. செந்தில்குமார், நிலையத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ஊக்கம், பருத்தி விவசாயிகளுக்கான மகசூல் மேம்பாடு குறித்து விளக்கமளித்துப் பேசினார். காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை பேராசிரியர் முனைவர் ரா. மோகன் கலந்துகொண்டு, பருத்திக்கேற்ற உழவியல் தொழில்நுட்பங்களை விளக்கிப் பேசினார்.
வேளாண் கல்லூரியின் பூச்சியியல் துறை தலைவர் முனைவர் கே. குமார், பருத்தி பயிரில் வரும் பூச்சிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார். ராசி விதைகள் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் கே. ராஜவேலு பருத்தியில் தாக்கம் ஏற்படுத்தும் இளஞ்சிவப்பு காய்ப் புழுக்கள் குறித்தும், அதை தடுக்க வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்தும் விளக்கினார்.
இந்த பயிற்சியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 150 விவசாயிகள் கலந்துகொண்டனர். பாசிக் நிறுவன துணைப் பொதுமேலாளர் ரா. முத்துக்கிருஷ்ணன், வேளாண் துணை இயக்குநர் (பொறியியல் பிரிவு) எஸ். அருணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பருத்தி பயிர் தொடர்பாக விவசாயிகள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர். வேளாண் அறிவியல் நிலைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநர் பா. கோபு, பண்ணை மேலாளர் ஆண்டனிதாஸ் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.