காரைக்காலில் புகழ்பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
முன்னதாக ஆலயத்திலிருந்து திரளான மக்கள் முன்னிலையில் கொடி, ஆலய வலமாக கொடிக்கம்பம் அருகே கொண்டுவரப்பட்டது. ஆலயத்தில் திருப்பலி நடத்தப்பட்டு, பங்குத் தந்தை அந்தோணி லூர்துராஜ் முன்னிலையில், காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதல்வர் சி.அந்தோணிராஜ் கொடியேற்றினார். உதவி பங்குத் தந்தையர் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து தினமும் மாலை 6 மணியளவில் திருப்பலி மற்றும் சிறிய தேர் பவனியும் நடத்தப்படுகிறது.
10-ஆம் நாளான 15-ஆம் தேதி காலை திருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, மாலை 6.30 மணிக்கு காரைக்கால் பங்கு மக்களின் பொது உபயமாக, ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பர். 16-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்படுகிறது.