திருப்பட்டினம் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் வருகையின்மையால் கால்நடை உயிரிழப்பு தொடர்வதாகக் கூறி, உயிரிழந்த மாட்டுடன் கால்நடை வளர்ப்போர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினத்தில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இங்கு பணியாற்றக்கூடிய மருத்துவர் புதுச்சேரியிலிருந்து பணியமர்த்தப்பட்டவராம்.
இந்நிலையில் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பு விவசாயி திருமுருகன் வளர்ப்பில் இருந்த பசு மாடு உடல் சுகவீனத்துடன் கடந்த சில நாட்களாக காணப்பட்டது. இது வியாழக்கிழமை காலை உயிரிழந்துவிட்டது. உயிரிழந்த மாடு மற்றும் அதன் கன்றுடன் அவர், கால்நடை மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த கால்நடை விவசாயிகள் பலர் கலந்து
கொண்டனர்.
புதுச்சேரி அரசின் கால்நடைத்துறையைக் கண்டித்தும், மருத்துவரின் அலட்சியப்போக்கைக் காண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அகில இந்திய விவசாயிகள் சங்க காரைக்கால் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.தமீம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்ட நிறைவில் அவர் கூறியது :
திருப்பட்டினம் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர், கம்பவுண்டர் உள்ளிட்ட ஊழியர்கள் பணியிலிருக்கவேண்டும். ஆனால் மருத்துவர் புதுச்சேரி பிராந்தியத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பணிக்கு முறையாக வருவதே இல்லை. எப்போதாவது வருகிறார். நோய்வாய்ப்பட்ட கால்நடைகளைப் பரிசோதித்து மருத்துவம் அளிக்கும் வசதி இங்கு இல்லை. மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் வைத்திருப்பதில்லை. இதனால் கால்நடை விவசாயிகள் பலர், தங்களது கால்நடைக்கு சரியான மருத்துவம் தரமுடியாமல் தவிப்படைகின்றனர்.
கடந்த 10 நாட்களில் இதே பகுதியைச் சேர்ந்த மூவரது மாடுகள் உரிய மருத்துவமின்மையால் உயிரிழந்துவிட்டது. திருப்பட்டினம் பகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் அதிகமுள்ள பகுதியாகும். குறிப்பாக கால்நடை விவசாயிகள் அதிகமாக உள்ளபோது, கால்நடை விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் இல்லை. கால்நடை மருத்துவமனை 24 மணி நேரமும் சேவை செய்யும் வகையில் சூழல்களை உருவாக்கவேண்டும். உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு தக்க இழப்பீடு தரவேண்டும். இதில் அரசு நிர்வாகம் அலட்சியம் காட்டினால், கால்நடை விவசாயிகளை ஒன்றுதிரட்டி அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.
காரைக்கால் கால்நடைத்துறை இணை இயக்குநர் லதா மங்கேஷ்கர், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் நேரில் பேச்சு நடத்தினார். மாடு உயிரிழந்ததையொட்டி அதன் உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் உடனடி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முத்ரா கடன் திட்டத்தில் புதிதாக மாடுகள் வாங்குவதற்கு உதவி செய்யப்படும் என அவர் வாக்குறுதியளித்தார். மேலும் மருத்துவரை பணியிலிருக்கச் செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார். இதையொட்டி போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்துசென்றனர்.