புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து சார்பாக சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் கருக்கன்குடி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை எழுத்தர் காளியப்பன், கருக்கன்குடி கிராம பஞ்சாயத்து ஊழியர்
த. நாகராஜன் , டேங்க் ஆப்ரேட்டர் தமிழரசன், தற்காலிக ஊழியர் சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.
இக்கூட்டத்தில் கருக்கன்குடி, வளத்தாமங்கலம், புத்தக்குடி பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டனர். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அ.ராஜா முகம்மது மற்றும் தமுமுக பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
கருக்கன்குடி முதல் நல்லம்பல் வரை புதிதாகப் போடப்பட்டுள்ள தார்ச்சாலைகளின் இருபுறமும் மரங்கள் வளர்க்கவேண்டும். இந்தச் சாலையில் புதிதாக மின் விளக்குகள் அமைக்கவேண்டும். காரைக்கால் முதல் கருக்கன்குடி, நல்லம்பல் வழியாக மயிலாடுதுறை அல்லது கும்பகோணம் வரை அரசுப் பேருந்தை இயக்க வேண்டும்.
கருக்கன்குடி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட உட்புற சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் பழுதடைந்த தெரு விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். புத்தக்குடி சிவன் கோயில் எதிரில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு கடந்த 3 மாதங்களாக எரியாமல் இருப்பதை உடனே சரி செய்ய வேண்டும்.
வளத்தாமங்கலம் இந்திரா நகர் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் கடந்த இரண்டு வாரங்களாக எரியவில்லை. இதனை உடனே மின்துறை சரி செய்ய வேண்டும். கருக்கன்குடி பள்ளிவாசல் தெரு மற்றும் பட்டக்கால் தெரு இடையே உள்ள வாய்க்காலை தூர்வார வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் அவசர கதியில் போடப்பட்ட கொம்யூனுக்குட்பட்ட உட்புற சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.