Enable Javscript for better performance
பக்கோடா விற்கும் போராட்டம்: 'புதுச்சேரியில் மக்களை திசைத்திருப்ப செய்யும் அரசின் சூழ்ச்சி'- Dinamani

சுடச்சுட

    

    பக்கோடா விற்கும் போராட்டம்: 'புதுச்சேரியில் மக்களை திசைத்திருப்ப செய்யும் அரசின் சூழ்ச்சி'

    By DIN  |   Published on : 09th February 2018 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பக்கோடா விற்கும் போராட்டத்தை முதல்வர் வெ.நாராயணசாமி முன்னின்று நடத்தியது, மாநில அரசின் மீது மக்களுக்கு உள்ள கோபத்தை திசைத்திருப்ப செய்த சூழ்ச்சி என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பக்கோடா விற்கும் போராட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார்.
    இதுகுறித்து காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளர் வழக்குரைஞர் எஸ்.பி.செல்வசண்முகம் வியாழக்கிழமை
    கூறியது :
    புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்கும் முன்பாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இவவச அரிசி மாதம் 30 கிலோ வழங்கப்படும் என முதல்வர் கூறினார். ஆனால், 10 கிலோ வழங்கலிலேயே பிரச்னை இருக்கிறது. மக்கள் எதிர்பார்க்கும் இலவச அரிசியை அரசால் தர முடியவில்லை.
    மாநிலத்தில் சாலைகள் தரம் வெகுவாக சீர்கெட்டுவிட்டது. சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் அரசை கடுமையாக விமர்சித்தே செல்கின்றனர்.
    அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் வெகுவாக குறைந்துவிட்டது. பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, திருநள்ளாறு தொகுதி மாநில கல்வி அமைச்சரின் தொகுதி. கல்வித்தரம் உயர பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பள்ளியில் அடிக்கடி கூடவேண்டும் என அமைச்சர் கூறுகிறார். அவருக்கு ஆதரவான பெற்றோர்களும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவருக்கு ஆதரவான பெற்றோர்களும் இருப்பதால், மாணவர்கள் கல்வியில் அரசியல் கலக்கப்படுகிறது. இதனால் நோக்கம் நிறைவேறவில்லை. பள்ளிகளில் சீர்கேடு அதிகரித்துவருகிறது.
    காரைக்காலில் மருத்துவமனையை மேம்படுத்த புதுச்சேரி அரசு முன்வரவில்லை. ஜிப்மர் நிர்வாகம் மருத்துவமனையை மேம்படுத்த நிதி ஒதுக்கும் என்றது. இதுவும் உலகளாவிய ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளதாக ஆட்சியர் கூறுகிறார். எந்தவித முன்னேற்றமும் மருத்துவத் துறையில் இல்லை.
    ஏராளமான அரசுப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து வரியையும் மாநில அரசு உயர்த்திவிட்டது.
    மக்களின் பிரச்னைகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர் பேரவையிலோ, ஆட்சியாளர்களிடமோ பேசி தீர்வு காண முன்வருவதில்லை. மாநிலத்தின் 30 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
    மத்தியில் ஆளும் அரசாலும் மாநிலத்திற்கு எந்த பயனும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர் யாராக இருந்தாலும் மக்களைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. இந்நிலையில், புதுச்சேரி அரசு மீது மக்கள் கடுமையான வெறுப்புடன் உள்ளனர்.
    ஆளும் அரசைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது ஜனநாயக முறை. ஆனால், ஆளும் அரசே போராட்டத்தில் ஈடுபடுவது என்பது தமது கையாலாத்தனத்தையே காட்டும் செயல். அதுவும் முதல்வரே களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவது என்பதெல்லாம், மக்களை திசைத் திருப்ப செய்யும் சூழ்ச்சி என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai