Enable Javscript for better performance
பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்கள் நிலுவை மாதங்களின் ஊதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
    புதுச்சேரி அரசு நிறுவனமான பாப்ஸ்கோ, ரேஷன் கடைகள், மதுக்கடைகள், பள்ளிகளுக்கு மளிகை, காய்கறி அனுப்புவது உள்ளிட்ட பணிகளைச் செய்துவருகிறது. காரைக்காலில் நிரந்தர, தாற்காலிக அடிப்படையில் 60 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்களுக்கான 13 மாத ஊதியத்தை அரசு இதுவரை வழங்கவில்லையெனக் கூறி, மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வியாழக்கிழமை முதல் தொடர் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
    காரைக்கால் அலுவலகத்தில் பாப்ஸ்கோ ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் தலைமையில் ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்
    டுள்ளனர்.
    கோரிக்கைகள் : பாப்ஸ்கோவில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு 10 மாத ஊதியம், தினக்கூலி ஊழியர்களுக்கு 13 மாத ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும். தற்போதுள்ள பாப்ஸ்கோ மேலாண் இயக்குநர் முறையாக பணிக்கு வராதததால், அவரை பணியிட மாற்றம் செய்துவிட்டு, ஐ.ஏ.எஸ். அலுவலரை மேலாண் இயக்குநராக நியமித்து பாப்ஸ்கோ நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
    பாப்ஸ்கோ ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பாப்ஸ்கோ நிறுவனத்தை குடிமைப்பொருள் வழங்கல் துறை நிர்வாகத்தோடு இணைத்து, குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஊழியர்களிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஊதியத்தில் பிடித்தம் செய்து இதுவரை செலுத்தப்படாமல் உள்ள இ.பி.எஃப், இ.எஸ்.ஐ., எல்.ஐ.சி உள்ளிட்ட திட்டங்களின் நிதி மற்றும் கடன் தொகையை சம்பந்தப்பட்ட அலுவலகம் மற்றும் வங்கியில் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஊழியர்களது போராட்டம் தொடரும் என தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
    இப்போராட்டத்தில் காரைக்கால் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால், பாப்ஸ்கோவிற்கு சொந்தமான 10 ரேஷன் கடைகள், 3 மதுபானக் கடைகள், 1 பெட்ரோல் பங்க் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளுக்கு மதிய உணவுக்கான மளிகை, காய்கறிகள் அனுப்பிவைப்பது உள்ளிட்ட பணிகளும் பாதிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai