Enable Javscript for better performance
பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. மறியல் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. மறியல் போராட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அரசு உயர்த்திய பேருந்து கட்டணத்தை உடனடியாகத் திரும்பப் பெறக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் செய்து கைதாகினர்.
    இக்கட்சியின் காரைக்கால் பிரதேச அமைப்பு சார்பில் பேருந்து நிலையம் அருகே பேருந்து கட்டணத்தை உயர்த்தியதைத் திரும்பப் பெற வலியுறுத்தி மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதேச செயலர் எஸ்.எம்.தமீம் தலைமை வகித்தார்.
    புதுச்சேரி மாநில அரசு சாலைப் போக்குவரத்துக் கழகமான பி.ஆர்.டி.சி. பேருந்து கட்டணம், தமிழகத்தைப்போல உயர்த்தப்பட்டது நியாயமற்ற செயல். மாநிலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படும் இப்பேருந்து சேவை ஏழை, நடுத்தர மக்களுக்குத் தேவை. இதன் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது புதுவை மாநில மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.
    புதுச்சேரி ஆளும் நாராயணசாமி அரசு, தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். புதுச்சேரி மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடியும், முதல்வர் வி.நாராயணசாமியுமே காரணம். இதனால் மாநில மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். எனவே, நிதிப் பிரச்னைக்கு அரசு தீர்வு காணவேண்டும்.
    மாநிலத்தில் புதிய அரசுப் பதவியிடங்கள் நிரப்புவதற்கு நிதிச் செயலர் தடை விதித்துள்ளார். இதனை திரும்பப் பெறவேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கித் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதியார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை காரைக்கால் நகர காவல்நிலைய போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
    மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட், என்.எம்.கலியபெருமாள், ராமகிருஷ்ணன், திவ்யநாதன், அப்துல் அஜீஸ், எஸ்.ஏ.முகமது யூசுப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai