Enable Javscript for better performance
ரூ.40 லட்சத்தில் மலர்க் கண்காட்சி பிப்.16-இல் தொடங்குகிறது- Dinamani

சுடச்சுட

    

    ரூ.40 லட்சத்தில் மலர்க் கண்காட்சி பிப்.16-இல் தொடங்குகிறது

    By DIN  |   Published on : 09th February 2018 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் 18-ஆவது மலர், காய்கனி கண்காட்சி வரும் 16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும், போட்டிகள் மற்றும் பாதுகாப்புக்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
    பல்வேறு அரசுத்துறை அலுவலர்களிடையே கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனையை மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை மேற்கொண்டார். வேளாண் துறை இயக்குநர் ராமமூர்த்தி இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
    ஆலோசனை நிறைவில் ஆட்சியர் கூறியது : காரைக்காலில் 18-ஆவது மலர், காய்கனி கண்காட்சி நகராட்சி சந்தைத் திடலில் பிப்.16 முதல் 18 வரை நடைபெறுகிறது. இதற்காக அரசு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
    கண்காட்சிக்கான மலர், காய்கனி செடிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து தருவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கண்காட்சி அரங்கத்தில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் ஸ்டால்கள் அமைக்க அனுமதி வழங்கப்படும். தனியார் ஸ்டால்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். முதல் நாள் கண்காட்சியில் பள்ளி மாணவ -மாணவியரின் ஆடல், பாடல் நிகழ்ச்சியும், 2-ஆம் நாள் இன்னிசை நிகழ்ச்சியும், 3-ஆம் நாள் உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்கும் பல்வேறு இசை நிகழ்ச்சியும் நடைபெறும். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு நிறைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும். கண்காட்சி நடைபெறும் 3 நாள்களும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தினர் கண்காட்சிப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள், வாகனங்கள் பார்க்கிங் வசதிகள் மைதானத்தில் ஏற்படுத்தப்படுகின்றன. 10-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வசதி தங்குதடையின்றி இருக்க மின்துறை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
    கூட்டத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ், கூடுதல் வேளாண் இயக்குநர் க.மதியழகன், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் கந்தசாமி, மண்டல காவல் கண்காணிப்பாளர் வம்சீதரரெட்டி, மின்துறை செயற்பொறியாளர் ராஜேஷ் சன்யால், மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சித்ரா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏ.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai