Enable Javscript for better performance
வி.எம்.சி.சிவகுமார் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளி சிறையிலடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வி.எம்.சி.சிவகுமார் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளி சிறையிலடைப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவர் வி.எம்.சி.சிவகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விக்ரமனிடம் விசாரணை முடித்த நிலையில், காரைக்கால் நீதிமன்றத்தில் போலீஸார் அவரை வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர்.
    காரைக்கால் பகுதி நிரவியில் புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவர் வி.எம்.சி.சிவகுமார், கடந்த ஆண்டு ஜன. 3-ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக மறைந்த தொழிலதிபர் ராமு என்கிற ராதாகிருஷ்ணனின் 2-ஆவது மனைவி எழிலரசி உள்ளிட்ட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவரான திருப்பட்டினம் போலகத்தைச் சேர்ந்த விக்ரம் என்கிற விக்ரமன் (37) என்பவர் புதுச்சேரியில் ஆயுதங்கள் வைத்துக்கொண்டு 14 பேர்களுடன் ஹோட்டலில் இருந்தபோது கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரி போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
    சிவகுமார் கொலை வழக்குத் தொடர்பாக விக்ரமனிடம் விசாரிக்க நீதிமன்றம் 3 நாள்கள் காரைக்கால் போலீஸாருக்கு அனுமதியளித்தது. கடந்த 5-ஆம் தேதி முதல் இவரை காவலில் எடுத்து வந்த காரைக்கால் போலீஸார், நிரவி பகுதியில் வைத்து அவரிடம் கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக் காலம் முடிந்ததையொட்டி காரைக்கால் குற்றவியல் நீதிமன்றத்தில் விக்ரமனை வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் வைக்க நீதிபதி பிரபு உத்தரவிட்டார்.
    விசாரணை குறித்து போலீஸார் கூறும்போது, வி.எம்.சி.சிவகுமார் கொலை வழக்கில் தமது தொடர்பை விக்ரமன் ஒப்புக்கொண்டார். இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள தஞ்சை மாவட்டம், வெண்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூழ் என்கிற சக்திவேல் என்பவரை பிடிக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai