Enable Javscript for better performance
அம்பகரத்தூர் மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    அம்பகரத்தூர் மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 31st March 2018 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநள்ளாறு அருகேயுள்ள  அம்பகரத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
    காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலைச் சேர்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். அம்பகரத்தூர் கடைத்தெரு அருகே அமைந்திருக்கும் இக்கோயிலைச் சேர்ந்ததாக ஸ்ரீ ஐயனார் கோயிலும் உள்ளது. குடமுழுக்கு செய்த காலம் நிறைவையொட்டி திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருப்பணிகளைத் தொடங்கினர்.
    குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை 9 முதல் 10 மணிக்குள்ளாக இரு கோயில்களிலும் நடைபெற்றது. முன்னதாக, மாரியம்மன் கோயில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. 4 கால பூஜையாக கடந்த 28 -ஆம் தேதி புதன்கிழமை காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரஹ ஹோமம் செய்யப்பட்டு மாலை முதல் கால பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு 2 -ஆம் கால பூர்ணாஹூதியும், இரவு 9 மணிக்கு 3 -ஆம் கால பூர்ணாஹூதி ஆராதனையும் நடைபெற்றது.
    யாகசாலை பூஜையின் நிறைவாக வெள்ளிக்கிழமை காலை 8 மணி மகா பூர்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்றது.  மாரியம்மன் கோயில் அருகேயுள்ள ஸ்ரீ ஐயனார் கோயிலில் காலை 9 மணியளவில் குடமுழுக்கு செய்யப்பட்டது.
    இதைத் தொடர்ந்து, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் விமானங்களில் புனித நீர் கடத்துடன் சிவாச்சாரியார்கள் ஏறினர். வேத மந்திரங்கள் கூறப்பட்டு, சரியாக 10 மணிக்கு கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு ஆராதனை செய்யப்பட்டது.
    நிகழ்ச்சியில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், திருநள்ளாறு கோயில் நிர்வாக அலுவலர் ஏ.விக்ராந்த் ராஜா, தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து தலைமையில், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், இரவு ஸ்ரீ மகா மாரியம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர், திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai