Enable Javscript for better performance
திருநள்ளாறு கோயிலில் ரூ.4.5 கோடியில் தங்க ரதம் செய்யும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருநள்ளாறு கோயிலில் ரூ.4.5 கோடியில் தங்க ரதம் செய்யும் பணி தொடக்கம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநள்ளாறு கோயிலில் ரூ. 4.5 கோடி மதிப்பில் தங்க ரதம் தயார் செய்யும் பணியை புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
    திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவானைத் தரிசிக்க சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். பக்தர்கள் பிரார்த்தனை நிறைவேற்றமாக சிறப்பு வழிபாடுகளுக்கான வசதிகளாக தங்க காக வாகனத்தில் சனீஸ்வரர் பிராகாரப் புறப்பாடு உள்ளிட்டவை இருந்தாலும், கோயிலுக்கென தங்க ரதம் இருக்க வேண்டும் என நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
    கடந்த 2014 -ஆம் ஆண்டு தங்க ரதம் தயார் செய்யும் பணிகளை கோயில் நிர்வாகம் தொடங்கியது. ஆனால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
    கோயில் நிர்வாக அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஏ.விக்ராந்த் ராஜா பொறுப்பேற்ற பின்னர் தங்க ரதம் தயார் செய்வதற்கான பணிகளின் இடர்பாடுகளை களைய முற்பட்டார். முறைப்படி ரதம் தயார் செய்யும் பணிகள் திருநள்ளாறு கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
    தருமபுர ஆதீன கட்டளை விசாணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கலந்துகொண்டு, பணிகளைத் தொடங்கிவைத்தார்.
    இதுகுறித்து கோயில் நிர்வாக அலுவலர் ஏ. விக்ராந்த் ராஜா கூறியது :
    ஸ்ரீ சனீஸ்வர பகவானைத் தரிசிக்க வருவோர் பல்வேறு வகையான பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். குறிப்பாக, தங்க ரதத்தின் அவசியம் குறித்து பக்தர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுப்பப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ. 4.5 கோடி மதிப்பில் தங்க ரதம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
     இது முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடையின்  மூலமே செய்யப்படுகிறது. தேவைப்படும்பட்சத்தில் கோயில் நிதி பயன்படுத்தப்படும். இந்த ரதத்துக்கு 8 கிலோ தங்கம் தேவைப்படுகிறது. தவிர,  செப்பு, பர்மா தேக்கு மரம் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது. 15 அடி உயரம், 8 அடி அகலத்தில் எண்கோண வடிவத்தில் இது செய்யப்படுகிறது.
    மரத்தால் செய்யப்படும் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும். பின்னர், தகடுகள் பதிக்கும் பணி செய்யப்பட்டு ஏறக்குறைய மூன்றரை மாதங்களில் ரதம் தயார்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரதம் தயார் செய்யும் பணியைக் கண்காணிக்கத் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. 
    தங்க ரதம் சுவாமி, அம்பாள், சனீஸ்வரர் உள்ளிட்டோருக்குப் பயன்படுத்தப்படும். பக்தர்கள் முன்பதிவு செய்துகொண்டு தங்க ரதம் இழுக்க வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். இதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
    தற்போது, ரதம் தயார் செய்வதற்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்தை நேரடியாக அணுகி விவரம் தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai