Enable Javscript for better performance
மீன்பிடி தடைக்காலம் : பெரிய வகை மீன்கள் வரத்து இல்லை: மீன்பிரியர்கள் வேதனை- Dinamani

சுடச்சுட

    

    மீன்பிடி தடைக்காலம் : பெரிய வகை மீன்கள் வரத்து இல்லை: மீன்பிரியர்கள் வேதனை

    By DIN  |   Published on : 18th May 2018 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீன்பிடி தடைக்காலம் நிலவிவருவதையொட்டி, பெரிய வகை மீன்கள் வரத்து முற்றிலும் இல்லை. சிறிய வகை மீன்கள் வரத்து மட்டுமே உள்ளதால், விரும்பும் வகைகள் கிடைக்கவில்லை என மீன் பிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    ஆழ்கடல் மீன்பிடிப்புக்கேற்ற பருவமாக நிகழாண்டு ஏப். 15 முதல் 61 நாள்கள் விசைப்படகு மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் 250 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு, படகு பராமரிப்புப் பணிகளை மீனவர்கள் செய்து வருகின்றனர்.
    குறைந்த தூரத்துக்கு ஃபைபர் படகில் சென்று மீன்பிடித்து வர தடையேதும் இல்லை. இதனால் இவ்வகை படகுகளை இயக்கிக்கொண்டு மீனவர்கள் மீன்பிடித்துத் திரும்புகின்றனர். ஏற்றுமதித் தரம் வாய்ந்த மீன்கள் இந்த படகு மீனவர்கள் வலையில் கிடைப்பதில்லை.
    அனைத்துமே சிறிய வகை மீன்களாகவே இருக்கின்றன. குறிப்பாக இறால்,  நண்டு ஆகியவை அதிகமாக கிடைப்பதில்லை. எந்த வகை மீனாக இருந்தாலும் சிறிய அளவிலேயே இருக்கின்றன. காரைக்கால் பிரதான மீன் சந்தை மற்றும் ஆங்காங்கே உள்ள சிறிய மீன் அங்காடிக்கு, சிறிய படகு மூலம் பிடித்துவரும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மீன்கள் ஏராளம் வந்தும், பெரிய அளவிலான மீன்களும், வகை வகையான மீன்களும் இல்லாதது மீன் பிரியர்களை  வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
    மேலும், சிறிய வகை மீன்களும் தடைக்காலத்துக்கு முன்பு விற்ற விலையில் இல்லை. கணிசமாக விலை உயர்த்தப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன. இதுவும் பொதுமக்களுக்கு ஏற்புடையதாக இல்லை.
    மீன் விற்பனை செய்வோர் கூறும்போது, விசைப்படகு மீன்கள் வந்தால் மட்டுமே தாராளமான மீன்களும், பல்வேறு வகைகளும், அளவில் பெரிதாகவும் இருக்கும். தற்போது வரக்கூடியவை அனைத்தும் சிறிய படகில் குறைந்த தூரத்தில் பிடித்துவரப்படுபவை. படகுதாரர்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து வாங்க நேரிடுவதால், அதற்கேற்ப விலை நிர்ணயித்து விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
    மீன் சந்தைக்கு சென்றுத் திரும்பும் மக்கள் கூறுகையில், அளவில் மிகச் சிறிய மீன்களே கிடைக்கின்றன. சில வகை சற்று பெரிய அளவில் இருந்தால், அதன் விலை அதிகபட்சமாக இருக்கிறது. இதனை எல்லோராலும் வாங்கிவிட முடியாது. இதனால் வாஞ்சூரையொட்டிய நாகூர் பகுதி மீன் சந்தைக்கு சென்று மீன் வாங்கி வருகிறோம். தடைக்காலம் எப்போது முடியும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றனர்.
    கோலா மீன் வரத்தால் மக்கள் சற்று ஆறுதல் : கடந்த 2 மாதங்களாக கோலா மீன் வரத்து காணப்படுகிறது. மாலை வேளையில் கொண்டுவரப்படும் கோலா மீன் சந்தைகளுக்கும், தெருக்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ரூ. 50-க்கு 10 மீன்கள் வீதம் இது விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், 2 மாதங்கள் இந்த வகை மீன் சீசன் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது மக்களின் தேவைக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்துகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai