அக்.15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: மின்துறை ஊழியர்கள் உறுதி

கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசைக் கண்டித்து, வரும் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை

கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசைக் கண்டித்து, வரும் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதில் உறுதியாக இருப்பதாக மின்துறை ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
பதவி உயர்வு மற்றும் ஊதிய விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மாநில மின்துறை ஊழியர்கள் கடந்த பல மாதங்களாக போராட்டம்  நடத்தி வருகின்றனர்.
 இந்நிலையில், போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில், வரும் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதனிடையே, மின் கட்டண பில் வழங்கல் பணியில் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, அதில் தனியாரை ஈடுபடுத்த முடிவு செய்திருப்பதாகக் கூறி, மின்துறை ஊழியர்கள் புதன்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில், அதிகாரிகளுக்குக் கீழ்நிலையில் சுமார் 220 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மின்கட்டண பில் வழங்கல், பழுதுநீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் இவர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், மின்துறைக்கு வருவாய் பாதிப்பும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதும் உறுதியாகிறது.
இதுகுறித்து மின்துறை ஊழியர்கள் போராட்டக்குழு பிரதிநிதி பழனிவேல் வியாழக்கிழமை கூறியது:
மின்துறையினர் பெற்றுவந்த ஊதிய விகிதத்தைக் குறைக்க மத்திய அரசு புதுச்சேரி அரசுக்கு அறிவுறுத்தியது. இது ஏற்புடையது அல்ல என்று ஆட்சியாளர்களிடம் எடுத்துக் கூறியுள்ளோம். மாநில மின்துறை ஊழியர்களின் நியாயத்தையும், அரசின் கருத்தையும் மத்திய அரசுக்குத் தெரிவித்து, உடன்படச் செய்ய ஏற்பாடு செய்யுமாறு கூறிவருகிறோம். ஆனால், அவ்வாறான நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், பில் வழங்கல் பணியில் "அவுட்சோர்சிங்' முறையில், தனியாரை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர். 
இது மின்நுகர்வோருக்கு பல்வேறு நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த முடிவை ஏற்கமாட்டோம். வரக்கூடிய பருவமழை காலத்தில் மின்துறையினரின் சேவை மிகவும் முக்கியம் என்பதை அரசு உணர்ந்து, எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதில் இருந்து பின்வாங்க முடியாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com