வாசிப்பு பழக்கம் வெற்றிக்கான பாதையைக் காட்டும்: ஆட்சியர்

புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்வது

புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்வது, வெற்றிக்கானப் பாதையைக் காட்டும்  என்றார் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன்.
அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கம் சார்பில் கோட்டுச்சேரி சர்வைட் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெற்றோர் சங்கத் தலைவர் அ.வின்சென்ட் தலைமை வகித்தார்.  பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 
மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியது:
ஒவ்வொருவருக்கும் 18 வயது வரை பள்ளிப் படிப்பில்தான் காலம் கடக்கிறது. பள்ளிப் பருவக் காலத்தில் நல்ல சிந்தனைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். மாணவர்கள் யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ளுதல் கூடாது. நம்மால் சாதிக்க முடியும் என்ற நேர்மையான சிந்தனையை வளர்த்துக்கொள்ளவேண்டும். 
மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் உலகளாவிய எந்தவொரு விஷயத்தையும் கையடக்க சாதனத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். எனவே, எதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வ மிகுதி மாணவர்களுக்கு கண்டிப்பாக இருந்தாகவேண்டும். பள்ளிப் பருவத்தில் குறுகிய மனப்பான்மையின்றி, பரந்த மனப்பான்மையுடன், சக மாணவர்களோடு சகஜமாகப் பேசிப் பழகி வருவது மன ஆரோக்கியத்துக்கு சிறப்பைத் தரும்.
மாணவர்கள் கண்டிப்பாக புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இது வெற்றிக்கான பாதையைக் காட்டும்.
எந்தவொரு படிப்பும் கஷ்டம் கிடையாது. எதை தேர்வு செய்கிறோமோ அதில் திறம்படுவதற்கு உரிய பயிற்சியை தொடர்ந்து எடுக்கவேண்டும். மனப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும், புரிந்து படித்தால் அறிவு விரிவடையும் என்றார் ஆட்சியர்.
தொடர்ந்து, மாணவ- மாணவியரிடையே கேள்வி கேட்கச் செய்து, ஆட்சியர் விளக்கமளித்தார். அப்போது, சில மாணவர்கள் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என தங்களது ஆசையை வெளிப்படுத்தினர். எதற்காக ஐ.ஏ.எஸ். ஆக விரும்புகிறீர்கள் என ஆட்சியர் விளக்கம் தருமாறு மாணவர்களிடம் கேட்டார்.  அதற்கு, அரசு சட்டம் நிறைவேற்றினாலும்,  அதை அமல்படுத்துவது ஆட்சியர்தானே, அவரிடம்தான் அதிகாரம் உள்ளது. மேலும், மக்களுக்கு நேரிடையாக சேவை செய்யக்கூடியவராக ஆட்சியர் இருக்கிறார் என்றனர் மாணவர்கள். மாணவர்களின் இக்கருத்தை ஆட்சியர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் லில்லி சகாயம், பள்ளி முதல்வர் லில்லி பிரபாகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com