திருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி: அமைச்சர் தொடங்கிவைத்தார்

திருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, 500 மரக்கன்றுகள்

திருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, 500 மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதற்காக மரங்கள் பல வெட்டப்பட்டன. மாற்றாக புதிதாக மரம் வளர்ப்பு செய்யப்படும் என அமைச்சர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.  இதன்படி முதல்கட்டமாக 500 மரக்கன்றுகள் நடும் பணியின் தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்  மரக்கன்றை நட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது :  சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் சில வெட்டப்பட்டதற்கு ஈடாக 4 அடி உயரம் வளர்ந்த பல்வேறு வகை மரக்கன்றுகள் தற்போது நடப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் மேலும் 700 மரக்கன்றுகள் முக்கிய இடங்களில் நடப்படவுள்ளன. இதற்கு இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொருவரும் பிறந்தநாள் கொண்டாடும்போது, வீட்டிலோ, பொது இடத்திலோ மரக்கன்று நடும்  பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
காரைக்காலில் ஆட்சியர் தலைமையில் அண்மையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது. இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள்கிழமை இந்தக் கூட்டம் நடத்தப்படும். காரைக்காலில் மீன்பிடித் துறைமுக இரண்டாம்கட்ட மேம்படுத்தும் பணிக்காக நிதி அனுமதி கிடைத்துள்ளது. ரூ.59 கோடியில் இந்த திட்டப்பணி நடைபெறும். இதற்கான பூமி பூஜையில் முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்பார்கள். இது மீனவர்களுக்கு மட்டுமல்லாது காரைக்கால் வளர்ச்சிக்கும் முக்கிய திட்டமாகும்.
காரைக்கால் நகரப் பகுதியில் குடிநீர் குழாய் புதிதாக பதிக்கும் பணி ஏறக்குறைய முடியும் தறுவாயில் உள்ளது. காரைக்கால் அரசுத்துறைகள் அனைத்தையும் முதல்வர், அமைச்சர்கள் கண்காணித்துவருகிறார்கள். விவசாயிகள் கடன் பெறுவது சுலபமாக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் (பொ) ஏ.ராஜசேகரன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com