காவல்துறை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு

காரைக்காலில் பொது இடம், பள்ளி உள்ளிட்டவற்றில் தற்கொலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸாரால் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

காரைக்காலில் பொது இடம், பள்ளி உள்ளிட்டவற்றில் தற்கொலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸாரால் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
திருப்பட்டினம் காவல்நிலையம் சார்பில் திங்கள்கிழமை தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
போலகம் பகுதி திறந்தவெளியில் பொதுமக்கள் பலரை ஒருங்கிணைத்து, காவல் ஆய்வாளர் மரிய கிறிஸ்டின்பால், உதவி ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் பேசினர்.
நாட்டில் ஆண்டொன்றுக்கு 1.50 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். பல மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தற்கொலை வீதம் அதிகமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தற்கொலை தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், காரைக்காலில் தற்கொலை வீதம் குறைந்திருக்கிறது.
பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரிடையே இந்த விழிப்புணர்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. தற்கொலை எதிர்ப்பு நாளில் அனைவரும், எந்தவொரு சூழலிலும் தற்கொலை என்ற முடிவை எடுக்கமாட்டேன் என உறுதிமேற்கொள்ள வேண்டும். எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பதை உணர வேண்டும். சிறிய பிரச்னைக்கெல்லாம் தற்கொலை தீர்வாக அமைந்துவிடாது. இந்த முடிவு எடுப்பதால், குடும்பத்தில் நம்மை நம்பியுள்ளோர் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்பட்டுவிடும் என்பதை அனைவரும் உணர வேண்டும். பிரச்னையை தீர்ப்பதற்கு என்ன வழி இருக்கிறது என்பதை சிந்திக்க பழகிக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்கொலை விழிப்புணர்வு நாள் வரும் காலத்தில் தன்னம்பிக்கை நாளாக மாற வேண்டும். தற்கொலையே நமது கிராமத்தில் நடக்கக்கூடாது என்ற உறுதியை ஏற்று கிராமத்தினர் செயல்பட வேண்டும். விழிப்புணர்வு பெற்றவர்கள், மற்றவர்களுக்கு இதுகுறித்து தெரிவிக்க வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தற்கொலை என்ற முடிவுக்கே செல்லக் கூடாது. பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபராக இளைஞர்கள் திகழ வேண்டும் என போலீஸார் வலியுறுத்தினர்.
இந்த விழிப்புணர்வைத் தொடர்ந்து, போலகம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையிலும், திருப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்காலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதி வரை ஓராண்டில் 66 தற்கொலைகள் நடந்ததாகவும், கடந்த ஆகஸ்ட் முதல் 2018- ஆகஸ்ட் மாதம் வரை 46 நடந்துள்ளதாகவும். பரவலாக தரப்படும் விழிப்புணர்வால் ஓராண்டில் கணிசமான அளவு குறைந்திருப்பதாக போலீஸார் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com