பள்ளியில் பால் காய்ச்சும் பணியாளர்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தல்
By DIN | Published on : 12th September 2018 06:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பள்ளிகளில் பால் காய்ச்சும் பணியாளர்களுக்கு நிலுவை மாதங்களின் ஊதியத்தை உடனடியாக வழங்குமாறு கல்வி அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) அ. அல்லியை காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கௌரவத் தலைவர் ஜெய்சிங், பொதுச் செயலர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து பொறுப்பாளர்கள் கூறியது :
புதுச்சேரி அரசின் ராஜீவ் காந்தி சிற்றுண்டி திட்டத்தின் அடிப்படையில், புதுச்சேரி பாண்லே நிர்வாகத்தின் மூலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி அரசு கல்வி துறையின் கீழ் இயங்கும் கல்வி நிலையங்களுக்கு பால் காய்ச்சுவதற்காக நியமிக்கப்பட்ட ரொட்டிப்பால் வழங்கும் ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 4 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.
இதை உடனடியாக வழங்க கல்வித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் வலியுறுத்தப்பட்டது.
கோரிக்கையை கேட்டறிந்த முதன்மைக் கல்வி அதிகாரி, முதல்கட்டமாக ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஊதியத்தை வரும் 14 -ஆம் தேதிக்குள் வழங்குவதாகவும், மீதமுள்ள 2 மாத ஊதியத்தை மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார் என்றனர்.