கல்லூரி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது

மாதந்தோறும் ஊதியம் வழங்காததைக் கண்டித்து காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர், ஊழியர்கள்

மாதந்தோறும் ஊதியம் வழங்காததைக் கண்டித்து காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர், ஊழியர்கள் புதன்கிழமை முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.
புதுச்சேரி அரசின் பிப்மேட் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மாத இறுதியில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. மேலும், பகுதிநேர ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் நிலுவையில் உள்ளது என ஊழியர்கள் தரப்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு தீர்வு காண கோரப்படுகிறது. 
இந்நிலையில், காரைக்கால் வரிச்சிக்குடியில் இயங்கும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்கால்மேடு பகுதியில் இயங்கும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றும் விரிவுரையாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள், அமைச்சக ஊழியர்கள் ஆகியோர் தங்களுக்கான ஆகஸ்ட் மாத ஊதியம் இதுவரை வழங்காததை கண்டித்தும், பகுதி நேர ஊழியர்களுக்கான 4 மாத ஊதியம் வழங்காததை கண்டித்தும் புதன்கிழமை கல்லூரியில் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.
உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்துக்கு பிப்மேட் ஊழியர் சங்கச் செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
 காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கௌரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றோரை சந்தித்து ஆதரவு தெரிவித்து கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்.
ஊதியம் வழங்கப்படும் வரை இப்போராட்டம் தொடரும் எனவும், மற்ற அரசுத்துறை ஊழியர்களுக்கு மாதத்தின் இறுதி நாளில் ஊதியம் வழங்குவது போல் தொழில்நுட்பக் கல்லூரி ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு எடுக்கவேண்டும் என ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com