காரைக்காலில் ஆசிரியர் தின விழா: அமைச்சர் பங்கேற்பு

காரைக்கால் பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது.


காரைக்கால் பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது.
அரசுப்பள்ளிகளில் அதிக தேர்ச்சி விழுக்காடு தந்த ஆசிரியர்கள், வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள், மாநில அளவில் பல்வேறு விருது பெற்ற ஆசிரியர்களையும், மாவட்ட அளவில் கடந்த கல்வியாண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும் பாராட்டி விருது வழங்கி, புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பேசியது :
பட்டதாரி ஆசிரியர் சங்கமானது அனைத்துப் பிரிவு ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையுடன் மாணவர்கள் சிறந்த கல்வி கற்கச் செய்யவும், ஆசிரியர்களுக்கான உரிமைகளைப் பெறவும் பணியாற்றுவது பாராட்டுக்குரியது.
ஆசிரியர் சங்கத்தினர் விடுக்கும் கோரிக்கைகள் நியாயமானது ஆகும். இவற்றை படிப்படியாக நிறைவேற்றுவதில் கல்வித் துறை அதிக அக்கறை கொண்டு செயல்படுகிறது. மாணவர்களைத் தேர்ச்சி விழுக்காட்டில் அதிகம் காட்டுவது மட்டும் போதாது. மாணவர்கள் எந்தவொரு சவால்களையும் சந்திக்கும் ஆற்றலை உருவாக்க ஆசிரியர்கள் பாடுபடவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம்.
மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 170 கௌரவ ஆசிரியர்களை நியமிப்பதற்கு துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் பெற கல்வி அமைச்சர் என்ற முறையில் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளேன். அடுத்த ஓரிரு வாரத்தில் இதற்கான அறிவிக்கை வெளியிட வாய்ப்புள்ளது.
அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி தருவதிலும், அனைத்து வகையான சவால்களைக் கையாளும் வகையிலும் பாடுபடும் ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளுக்குச் சென்று டியூஷன் எடுக்கும் செயல்களை மறு சிந்தனைக்குட்படுத்தவேண்டும் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், கே.ஏ.யு.அசனா, முதன்மைக் கல்வி அலுவலர் அ.அல்லி, பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் சுந்தர்.மகாதேவன், ஆசிரியர் கூட்டமைப்புத் தலைவர் வீ.முத்தமிழ் குணாளன், பெற்றோர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர், செயலர் பி.பி.கே.செல்வமணி, காரைக்கால் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா கிளை மேலாளர் ஏ.புனிதவள்ளி ஆகியோர் பேசினர். புதுவை மாநில ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் ஆர்.காளிதாசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்ட பெற்றோர் சங்கம் சார்பில் ஆசிரியர்கள் பலருக்கு விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com