நீல கடற்கரைத் திட்டத்தால் காரைக்கால் சிறந்த சுற்றுலாத் தலமாக உருவெடுக்கும்: அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்

நீல கடற்கரைத் திட்டம் காரைக்காலில் உருவாகும்போது சர்வதேச அளவில் காரைக்கால் சிறந்த சுற்றுலாத் தலமாக உருவெடுக்கும் என சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கூறினார்.


நீல கடற்கரைத் திட்டம் காரைக்காலில் உருவாகும்போது சர்வதேச அளவில் காரைக்கால் சிறந்த சுற்றுலாத் தலமாக உருவெடுக்கும் என சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கூறினார்.
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் ஆண்டுதோறும் கடலோரக் காவல் படையினரால், செப்டம்பர் மாதம் 3-ஆவது சனிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. காரைக்கால் கடற்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு மற்றும் தூய்மை செய்யும் நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா, கடலோரக் காவல்படை கமாண்டன்ட் நாகேந்திரன், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டு கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பேசியது : குப்பைகள் அகற்றம் என்பது தொடர்ந்து செய்யவேண்டியதாகவே இருக்கிறது. பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் கைவிடும் போக்குக்கு மக்கள் மாறவேண்டும். அப்போதுதான் குப்பைகள் குறையவும், அதனால் ஏற்படும் பிற பாதிப்புகளுக்கும் முற்றுப்புள்ளி ஏற்படும்.
பெரும்பாலும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரே ஈடுபடுகின்றனர். பெற்றோர்கள், குடும்பத்தினர் இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்தவேண்டும்.
புதுச்சேரியும், காரைக்காலும் இயற்கை வளம் மிக்க பிராந்தியங்களாகும். கடற்கரையும், கடற்கரை சார்ந்த பிற மேம்பாடுகளுமே பெருமைக்குரியதாக விளங்குகிறது. காரைக்கால் பிராந்தியத்தில் சுற்றுலா மேம்படவேண்டும், மக்கள் சுகாதாரமாக வாழவேண்டும், சுற்றுலாவினர் காரைக்காலை விரும்பவேண்டுமெனில் குப்பையில்லா, கழிவுநீர் தேக்கமில்லா பிராந்தியமாக காரைக்கால் உருவெடுக்கவேண்டும். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.
மாநில அரசின் ஒத்துழைப்புடன் மத்திய அரசு காரைக்காலில் நீல கடற்கரைத் திட்டத்தை அமல்படுத்தவுள்ளது. இதற்காக கருக்களாச்சேரி கடற்கரைப் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு செயல் திட்டங்களை அமல்படுத்தும்போது, காரைக்கால் மிகச் சிறந்த சுற்றுலா மையமாக உருவெடுக்கும். இது சர்வதேச ரீதியில் சிறந்ததாக விளங்கவும் வாய்ப்பிருக்கிறது. கடல் மற்றும் கடற்கரைப் பகுதியை தூய்மையாக வைத்திருக்கவேண்டியது மக்களின் பொறுப்பு என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com