கருணாநிதி பெயர் சூட்டப்பட்ட சாலை வருகிற மார்ச் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்: பொதுப்பணித் துறை அதிகாரி தகவல்

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட, காரைக்கால் மேற்கு புறவழிச் சாலைப் பணிகள்

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்ட, காரைக்கால் மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரி
தெரிவித்தார்.
 காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் பூவம் முதல் வாஞ்சூர் வரையிலான சுமார் 20 கி.மீட்டர் தொலைவுக்கு மாற்றுச் சாலையாக புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக திருமலைராயன்பட்டினம் பகுதியில் திருமலைராஜனாறு பாலம் முதல் போலகம் வரையிலான 3 கி.மீட்டர் தூரம் இருவழி கிழக்குப் புறவழிச்சாலைப் பணியை நிறைவேற்றி போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைத் திட்டப்பணி தொடங்கப்பட்டது.  இதில் முதல்கட்டமாக கீழகாசாக்குடி பகுதி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மேற்குப் புறமாக புறவழிச்சாலை 3.20 கி.மீ. தூரம் காரைக்கால் வாஞ்சியாற்றுப் பாலத்தில் முடியும் வகையில் ரூ.21 கோடி திட்டமாகவும், இரண்டாம் கட்டமாக வாஞ்சியாற்றுப் பாலத்திலிருந்து திருமலைராஜனாற்றுப் பாலம் வரை 5.5 கி.மீ. தூரம் ரூ.55 கோடி திட்ட மதிப்பிலும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.   முதல்கட்ட சாலைப் பணி கீழகாசாக்குடி முதல் காரைக்கால் சந்தைத் திடல் வரை 3.20 கி.மீ. தூரம் 75 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டது. எஞ்சியப் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடக்கும் தருணத்தில், சாலையில் செம்மண் கொட்டி வாகனங்கள் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் பிறகு கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டு, பணிகள் தொடராமல் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பெயரை இந்த புறவழிச்சாலைக்கு புதுச்சேரி அரசு சூட்டி பெருமைப்படுத்தியுள்ளது. காரைக்கால் நகரில் உள்ள போக்குவரத்து நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு காண இந்த சாலை பயன்பாட்டுக்கு வரவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது.
இதுகுறித்து, காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் (பொ) ஏ.ராஜசேகரன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: 
முதல்கட்ட சாலைப் பணியில் மேற்கு புறவழிச்சாலை, காரைக்கால் - பிள்ளைத்தெரு வாசல் இணைப்பில் ரவுண்டானா அமைக்கவேண்டியுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். பருவமழைக்குப் பின்னர் தார் கலந்த ஜல்லிகள் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். 2019 மார்ச் மாதத்தில் இந்த சாலையை பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும். இரண்டாவது கட்ட திட்டப்பணிக்கான ஆரம்ப நிலை அனுமதி கிடைத்துள்ளது. இதன் பிறகு நிதியாதாரத்தை திரட்டி, இந்த ப குதியில் கட்டவேண்டிய பாலங்கள் கட்டப்படும். பின்னர் சாலைப் பணி மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com