வங்கிக் கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்துவதாகக் கூறி ஆதார் விவரம் சேகரிப்பு: தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கூட்டணி புகார்

வங்கிக் கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்தப்படும் எனக் கூறி ஆதார் எண் சேகரிப்பது பாஜக கூட்டணிக்கு ஆதரவான

வங்கிக் கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்தப்படும் எனக் கூறி ஆதார் எண் சேகரிப்பது பாஜக கூட்டணிக்கு ஆதரவான செயல்பாடு எனவும், இதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. 
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு, நிரவி- திருப்பட்டினம், காரைக்கால் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசுத்துறையினர் குடியிருப்புவாசிகளிடம் சென்று ஆதார் எண்களை வாங்கி செல்லிடப்பேசியில் பதிவு செய்து செல்வதாக தகவல் பரவியது. மேலும் ரூ.6 ஆயிரம் தேர்தலுக்கு பிறகு அவரவர் வங்கிக் கணக்கில் வரவு செலுத்தப்படும் என்றும் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. 
 காங்கிரஸ்-திமுக கூட்டணியினர் இதுகுறித்து விசாரித்தபோது, மத்திய அரசின் "பிரதம மந்திரி மாத்ருவ வந்தனா யோஜனா ' திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் வழங்குவதற்காக ஆதார் எண்களைச் சேகரித்தது தெரியவந்தது.
இதையடுத்து திமுக காரைக்கால் அமைப்பாளரும்,  முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம்,  காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் தேர்தல் பணிக்குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.வி. சுப்பிரமணியன் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்  கீதாஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மாவட்டத் தேர்தல் அதிகாரி விக்ரந்த்ராஜாவை புதன்கிழமை சந்தித்து புகார் தெரிவித்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, மேற்கண்ட திட்டத்துக்கு அவசரமாக ஆதார் எண்களை வாங்கி பதிய வேண்டிய அவசியம் என்ன? ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாகவே இது கருதப்படுகிறது. எனவே, இதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 
புகார் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ரந்த்ராஜா, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியைத் தொடர்பு கொண்டு இத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டார். 
சந்திப்புக்கு பின்னர் ஏ.வி. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, மத்திய அரசின் திட்டத்தை தற்போது அவசரமாக அமல்படுத்தும் வகையில் அதிகாரிகள் ஈடுபடுவது தெரியவந்தது. இது குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளோம். அவர் உடனடியாக திட்டத்துக்குத் தகவல் சேகரிப்பதை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
 தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோது, இதுபோன்ற செயல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயலாகும். இதுவரை ஆதார் எண் பெறப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க எழுத்துப் பூர்வமாக புகார் கொடுக்க உள்ளோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து பாஜக பயந்துவிட்டது. இதனால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று, அரசுத்துறை அதிகாரிகளை பயன்படுத்தி வாக்குக்கு பணம் கொடுக்கும் செயலில் ஈடுபடத் தொடங்கி உள்ளது. ரூ.6 ஆயிரம் வழங்கும் வகையில் செல்லிடப்பேசி மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது முழுமையாக தடுக்கப்பட வேண்டும். பாஜவின் நடவடிக்கைகளுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார். 
இது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை உதவி இயக்குநர் சத்யாவிடம் கேட்டபோது அவர் கூறியது:  ஒவ்வொரு நிதியாண்டு தொடங்கும்போது, குறிப்பாக ஏப்ரல் மாதம் அங்கன்வாடி வட்டாரத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், இளம் பெண்கள் எவ்வளவு பேர் உள்ளார்கள் எனக் கணக்கெடுப்பு நடத்தப்படும். அப்பணிகளை அங்கன்வாடி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். யாரோ சிலர் தேவையில்லாமல் வதந்திகளை பரப்பியுள்ளனர். மேலும் அவர்கள் புகார் தெரிவிக்கும் "பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்துக்கும், தற்போது சர்வே எடுக்கும் பணிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. மாத்ருவ வந்தனா யோஜனா திட்டத்துக்குக் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது. பெண்கள் கர்ப்பமடைந்த 100 நாள்கள் கழித்து மருத்துவரிடமிருந்து சான்றிதழ் பெற்றுக்கொண்டு இணையதளத்திலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். 
அவர்களுக்கு 3 தவணையாக ரூ.5 ஆயிரம் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கும், தற்போது நடைபெற்று வரும் கணக்கெடுப்புப் பணிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர். இருப்பினும் அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் கணக்கெடுப்பும் பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது. தேர்தலுக்குப் பிறகு கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com