Enable Javscript for better performance
காரைக்காலில் கடும் போக்குவரத்து நெரிசல்: கண்டுகொள்ளாத காவல் துறையால் மக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    காரைக்காலில் கடும் போக்குவரத்து நெரிசல்: கண்டுகொள்ளாத காவல் துறையால் மக்கள் அவதி

    By DIN  |   Published on : 11th April 2019 09:25 AM  |   அ+அ அ-   |    |  

    வழக்கமாக சாலைகளில் வாகனங்களை ஒழுங்கீனமாக நிறுத்துவது தொடரும் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் நடைபெறும் ஊர்வலங்களால் காரைக்கால் நகரத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. காரைக்கால் காவல் துறையினர் போதிய கவனம் செலுத்தி சீர்படுத்த முயற்சிக்காததால் மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். 
    காரைக்கால் மாவட்டத்தில் பூவம் முதல் வாஞ்சியூர் வரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. தவிர, காரைக்கால் நகரப் பகுதியில் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை, மாதா கோயில் சாலை, காமராஜர் சாலை, புளியங்கொட்டை சாலை ஆகியவை வணிக நிறுவனங்கள் மிகுந்ததாகவும், போக்குவரத்து மிகுந்த பகுதியாகவும் விளங்குகிறது.
    காரைக்கால் நகரத்தில் மட்டுமே தேசிய நெடுஞ்சாலை பாரதியார் சாலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. நகரப் பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரம் இச்சாலையின் இருபுறங்களில் வணிக நிறுவனங்கள் நூற்றுக்கணக்கானவை அமைந்திருக்கின்றன. புதுச்சேரி சுதந்திரத்துக்கு முன்பே காரைக்கால் நிர்மாணிக்கப்பட்ட நகராக விளங்கியது. நேரான, நேர்த்தியான சாலை அமைப்பு காரைக்காலுக்கு பெருமை சேர்க்கக்கூடியவை.
    காலப்போக்கில் புதுச்சேரி அரசின் நகரமைப்புக் குழுமம் சார்பில் கட்டடம் கட்டுவோருக்கு உரிய விதிகள் வகுத்துத் தரப்பட்டது. இதில், குடியிருப்பு மக்கள், நிறுவனத்தினருக்கு சாலையோர நடைபாதைக்கு இடம் தந்து கட்டடம் கட்ட அனுமதி தரப்பட்டது. இதை பெரும்பான்மையினர் ஏற்று கட்டடத்தை கட்டவில்லை. திருமண மண்டபங்கள், கார் பார்க்கிங் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், பெரும்பாலான மண்டபங்கள் பெயரளவுக்கு சிறிய பகுதியை கார் பார்க்கிங் என குழுமத்திடம் காட்டிவிட்டு கட்டடத்தை கட்டிவிட்டன. மண்டபத்துக்கு வருவோர் கார், இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தும் அவலம் உள்ளது.
    காரைக்கால் மாவட்ட மக்கள் பெரும்பான்மையான பொருள்கள் வாங்க காரைக்கால் நகரப் பகுதிக்கு வரவேண்டும். அதற்கேற்ப வியாபார நிறுவனங்கள் நகரப் பகுதியில் பெருகிவிட்டன. ஆனால், நகரப் பகுதிக்கு வருவோர் தங்களது கார், வேன்களை நிறுத்த வசதியான பார்க்கிங் வசதியை மாவட்ட நிர்வாகம்  இதுவரை ஏற்படுத்தவில்லை. சாலையின் அகலம் குறுகியதாக இருக்கும்போது, சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள், போக்குவரத்துள்ள சாலையின் ஒரு பகுதியில் கார், வேன்களும் நிறுத்தப்படுகின்றன. சில சாலைகளில் இடது, வலது என இரு புறத்திலும் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இரு வழி போக்குவரத்து நடைபெறும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    நகரப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு திருப்பட்டினம், நிரவி, திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்தும் ஆம்புலன்ஸ் வாகனங்களும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கி, உரிய வேகத்தில் மருத்துவமனையை சென்றடைய முடியாத நிலை நீடிக்கிறது.
    தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறும் காலமாக இருப்பதால், வேட்பாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபடும் கட்சியின் முக்கியத் தலைவர்களை பின்தொடர்ந்து செல்லும் வாகனங்கள் ஏராளம். இவை நகரப் பகுதியில் வெகு நேரம் நிறுத்தி பிரசாரத்தில் ஈடுபடும்போது, தொலைதூரத்துக்குச் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. 
    காரைக்காலில் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட காவலர்களாக 260 பேர் பணியாற்றுகின்றனர். இரு போக்குவரத்துக் காவல் நிலையம் உள்ளது. சாலை சந்திப்பில் போக்குவரத்துக் காவலர் பணியில் இருக்கிறார்களேத் தவிர, போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் வகையிலோ, முறையை மீறி வாகனங்கள் நிறுத்தியிருந்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலோ ரோந்து முறை போலீஸாரின் பணி இருக்கவில்லை. நெரிசலை பார்த்தும் பார்க்காததுபோல காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் செல்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் காரைக்கால் காவல் துறையானது நகரப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க முன்வருவதே இல்லை. தேர்தல் நேரமாக இருப்பதால், கட்சியினர் பிரசாரத்தை முறைப்படுத்த தேர்தல் துறையினரும் ஈடுபாடு காட்டவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் புகாராக உள்ளது.
    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஏ.எம். இஸ்மாயில் கூறியது: விபத்து, பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாதது போன்றவை போக்குவரத்து நெரிசலால் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்பது எட்ட முடியாவிட்டாலும், வாகனங்களை சாலையோரத்தில் முறையாக நிறுத்தவும், முறையற்று அலட்சியமாக நிறுத்திச் செல்வோர் மீது நடவடிக்கை எடுத்தால் ஓரளவு பிரச்னைக்கு தீர்வு கண்டதாக இருக்கும் என்பது பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp