தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயில், காரைக்கால் அம்மையார் கோயில், ஸ்ரீநித்யகல்யாணப்


தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயில், காரைக்கால் அம்மையார் கோயில், ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயில், ஸ்ரீமாரியம்மன் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
விளம்பி என்கிற ஆண்டு நிறைவடைந்து விகாரி தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீபிரணாம்பிகை அம்பாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீ நடராஜர் சன்னிதியில் மரகதலிங்கம் மற்றும் தனிச் சன்னிதிகொண்டிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல், காரைக்கால் அம்மையார் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காரைக்கால் ஸ்ரீஏழை மாரியம்மன், கடைத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பால், அலகு காவடி எடுத்து வந்து தரிசனம் செய்தனர். திருநள்ளாறு செல்லும் வழியில் உள்ள ஸ்ரீவழிகரை மாரியம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் மூலவரான ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. ஆண்டுக்கு மூன்று நாள் மட்டுமே இந்த அலங்காரம் செய்யப்படுகிறது என்பதால், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், வரிச்சிக்குடி ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டது. 
திருநள்ளாறு கொம்யூனில் உள்ள அம்பகரத்தூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீஆயிரங்காளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். காளியம்மன், மாரியம்மன் கோயிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் செல்வது வழக்கம். தமிழ்ப் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை வந்ததால் கூடுதலான பக்தர்கள் இக்கோயில்களுக்குச் சென்றனர். திருநள்ளாறு கோயில், காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் விகாரி ஆண்டையொட்டி பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com