சுடச்சுட

  

  தேர்தல் அமைதியாக நடைபெற காவல்துறையின் பங்கு முக்கியம்: மாவட்டத் தேர்தல் அதிகாரி

  By DIN  |   Published on : 16th April 2019 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற காவல்துறையினரின் பங்கு முக்கியமானது என மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.
  மக்களவைத் தேர்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ஏ.விக்ரந்த் ராஜா கலந்துகொண்டு பேசியது: தேர்தலையொட்டி 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை  72 மணி நேரம் காவல்துறையினரின் பணி மிக முக்கியமானது. மிகுந்த கவனமும், நேர்மையான பணியும் அவசியம். தேர்தல் பணியிலிருக்கும் காவலர்கள் செல்லிடப் பேசியைத் தவிர்த்து, காவல்துறை வழங்கியுள்ள வாக்கி டாக்கி மூலம் பேசவேண்டும்.
  தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு ஒலி பெருக்கி பயன்படுத்தக்கூடாது. 
  இந்த 3 நாள்கள் பணியிலிருக்கும் காவலர்கள் யாரிடமும் அரசியல் ரீதியாகவோ, மற்ற விஷயமாகவோ பேசுவதைத் தவிர்க்கவேண்டும். வாக்களிக்கச் செல்வோரிடம் கண்ணியமாக நடந்துகொள்வது மிகவும் முக்கியம். வாக்களித்துவிட்டு வருவோரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று யாரும் கேட்காத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும். தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்திட காவல்துறையினரின் பங்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றவேண்டும் என்றார் அவர்.
  மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் பேசும்போது,  "காவலர்கள் விருப்பு வெறுப்பின்றி பணி செய்யவேண்டும். யாருக்கும் ஆதரவான செயல்பாடு கூடாது.  காவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள நடத்தை விதிகளையும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளையும் சரியாக கடைப்பிடிக்கவேண்டும். வாக்குச்சாவடி தலைமை அதிகாரியின் எழுத்துப்பூர்வ கடிதம் இல்லாமல், வாக்குச் சாவடிக்குள் காவல் அதிகாரிகள், காவலர்கள்  செல்லக்கூடாது என்ற அவர், காவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்த விளக்க கையேட்டினை வழங்கினார்.
  மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், மண்டலக் காவல் கண்காணிப்பாளர்கள் டி.மாரிமுத்து, வீரவல்லவன், ஐ.ஆர்.பி.என். காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai