சுடச்சுட

  

  காரைக்கால் பிராந்தியத்தில் தேர்தல் பிரசாரத்தை தவிர்த்த முதல்வர் நாராயணசாமி: பொதுமக்களிடையே ஆதங்கம்

  By DIN  |   Published on : 17th April 2019 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மக்களவைத் தேர்தலையொட்டி, காரைக்கால் பிராந்தியத்தில் முதல்வர் நாராயணசாமி தேர்தல் பிரசாரத்தை தவிர்த்துள்ளதால் பொதுமக்களிடையே ஆதங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
  தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிக்கும் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வேட்பாளர்களை நிறுத்திய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர், துணை முதல்வர், நட்சத்திர பேச்சாளர்கள் பரவலான தொகுதிகளில் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தனர்.
  அவரவர்கள் தங்கள் கட்சியின் கொள்கைகளைக் கூறியும், எதிரணியினரை விமர்சித்தும், ஆட்சியின் செயல்பாடுகள், அதனால் மக்களுக்கான நன்மைகளை விளக்கியும், ஆட்சியின் அவலங்களை எடுத்துப் பேசுவதன் மூலமே வாக்காளர்கள் பலவற்றை சீர்தூக்கிப் பார்த்து, யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை தீர்மானிப்பர். வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்புப் பொருள்கள் வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையம் கூறி, தடுப்பு முறைகளைக் கையாண்டாலும், மீறி கொடுத்தாலும், மேற்கூறிய பிரசாரம் பெரும் சதவீத வாக்கை வேட்பாளருக்கு பெற்றுத்தரும் முக்கிய காரணியாக அமைகிறது.
  இதனால் தேர்தல் அறிவித்துவிட்டால், மக்களிடையே இதுதேர்தல் திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. தலைவர்கள் வருகை, பிரசாரம், பிரசாரத்தில் கூறப்படும் செய்தி ஆகியவற்றுக்காகவும், தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் வருகையை எதிர்நோக்கியும் ஆவலுடன் இருப்பவர்கள் ஏராளம். வேட்பாளருக்கு வாக்குகள் அதிகம் கிடைக்க, பிரசார விதங்கள் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் மேற்கண்ட தலைவர்கள், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்திருக்கிறார்கள்.
  ஒரு தொகுதியைக் கொண்ட புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் பூகோல அடிப்படையில் பிரிந்துக் கிடக்கின்றன. புதுச்சேரி தலைநகராகவும், காரைக்கால் என்பது புதுச்சேரியிலிருந்து 150 கி.மீ. தொலைவிலும், கேரள மாநிலத்தில் உள்ள மாஹே புதுச்சேரியிலிருந்து சுமார் 700 கி.மீ தொலைவிலும், ஆந்திரத்தில் உள்ள ஏனாம் சுமார் 800 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த தொகுதியில் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்யவேண்டும் எனில் வேட்பாளர் இருக்கக் கூடிய தலைநகரான புதுச்சேரியில் மட்டுமே செல்வர். 
  2-ஆவது பெரிய பிராந்தியமாகவும், புதுச்சேரி தொகுதியில் 2-ஆவது அதிக வாக்காளர்களைக்கொண்டுள்ள காரைக்காலுக்கு அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினத்துக்கு வரும் தலைவர்கள் காரைக்காலிலும் பிரசாரம் செய்துச் செல்வது வழக்கம். 
  ஆனால் இந்த மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் பிரசாரம் செய்த தமிழகத்தை சேர்ந்த கட்சித் தலைவர்கள், அண்டை மாவட்டமான திருவாரூர், நாகையில் பிரசாரம் செய்த கட்சித் தலைவர்கள் ஒருவர்கூட காரைக்காலுக்கு வரவில்லை. இவர்களது பிரசாரப் பயணத்தில் காரைக்காலில் ஓரிடத்திலாவது வாக்குக் கேட்புப் பிரசாரம் செய்யவும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள கட்சித் தலைவர்களின் முயற்சி இருக்கவில்லை. இதனால் எந்த ஒரு தலைவர்களும் வராமலேயே செவ்வாய்க்கிழமை பிரசாரம் நிறைவடைந்துள்ளது. 
  இவர்கள் ஒருபுறமிருந்தாலும், புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராவது காரைக்காலில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்குக் கேட்டிருக்கலாம். மார்ச் 28-ஆம் தேதி  வேட்பாளருடன் காரைக்கால் வந்த முதல்வர், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு, சில முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துவிட்டுச்
  சென்றார். 
  அதன் பிறகு புதுச்சேரியில் உள்ள 25 சட்டப் பேரவைத் தொகுதிகள், மாஹே, ஏனாமில் உள்ள தலா ஒரு பேரவைத் தொகுதிகளில் வேட்பாளருடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். காரைக்கால் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் பிரசாரம் ஓயும் நாளில்கூட முதல்வர் நாராயணசாமி பங்கேற்கவில்லை. மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணராவ், கந்தசாமி காரைக்காலில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். காரைக்காலை சேர்ந்த அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
  முதல்வர் காரைக்கால் வந்தால் ஊடகத் துறையினருக்கு ஒரு செய்தி அவ்வளவே. ஊடகத் துறையினர் இதுகுறித்து அக்கறை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஆளும் கட்சியினரும், கூட்டணிக் கட்சியினருக்கும் இந்த அக்கறை இருந்திருக்க வேண்டும். மாற்று அணியான என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருடன், அக்கட்சித் தலைவர் என். ரங்கசாமி காரைக்காலில் 2 நாள் பிரசாரம் செய்த நிலையில், முதல்வர் தங்களது கட்சி வேட்பாளரை ஆதரித்து 5 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யாமல் தவிர்த்த முடிவு, காரைக்காலை அரசியல் கட்சித் தலைவர்கள் தவிர்த்த வரிசையில் அவரும் இணைந்துகொண்டது 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். 
  முதல்வர் எத்தனையோ முறை காரைக்காலுக்கு வந்திருந்தாலும், தேர்தலில் திறந்த ஜிப்பீல் சென்று வாக்காளர்களை சந்திக்காமல் போனதே இந்த கருத்து விவாதத்துக்கு காரணமாக உள்ளது. இரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக காரைக்காலில் வீடு வீடாக வாக்குச் சேகரிப்பு செய்ததை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு மாநில முதல்வர் 1.50 லட்சம் வாக்காளர்கள் கொண்ட பிராந்தியத்தில், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மட்டும் பங்கேற்றுவிட்டு, பிறகு வாக்காளர்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பை செய்யாமல் தவிர்த்தது விவாதப் பொருளாகவே மாறியிருக்கிறது.
  முதல்வரை பிரசாரத்துக்கு வரவழைக்கக்கூட தலைமைத்துவ செயல்பாடுகள் கொண்ட மாவட்டத் தலைமை அக்கட்சியில் இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுவதாகவும், அக்கட்சியைச் சேர்ந்த பலரின் பேச்சாக உள்ளது. இது மக்களவைத் தேர்தலாக இருந்தாலும், முதல்வர், தலைவர்கள் எவரும் பிரசாரத்துக்கு வராமல், பேரவைத் தேர்தலைப்போல வீடுகளுக்குச் சென்று வாக்குச் சேகரிப்பு செய்து அந்தந்த கட்சியினர் தமது பணியை நிறைவு செய்துவிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai