சுடச்சுட

  

  தேசிய அளவில் காங்கிரஸின் வெற்றி உறுதி: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

  By DIN  |   Published on : 17th April 2019 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  புதுச்சேரி உள்ளிட்ட தேசிய அளவில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறினார்.  
  காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும், விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். நீட் தேர்வு விருப்பமில்லாத மாநிலங்கள் சுயமாக முடிவு செய்துகொள்ளலாம் போன்ற திட்டங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நாட்டில் 20 சதவீதம் ஏழைக் குடும்பங்கள் பயனடையும் வகையில், அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்பது முக்கியத் திட்டம். இத்திட்டத்தைப்போன்று 2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோது நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுவதன் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை உயர்வது நிச்சயம்.
  இதுதவிர, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸின் அடிப்படைக் கொள்கையான எளிமையை கடைப்பிடிப்பது அனைத்துத் தரப்பு மக்களாலும் வரவேற்கப்படுகின்றன. மேலும் மக்களின் தேவைகளை உணர்ந்தும் திட்டம் வகுப்பதில் ராகுல் காந்தி வல்லவராக திகழ்கிறார். இவையாவும் புதுச்சேரி மட்டுமல்லாது தேசிய அளவில் காங்கிரஸ் வெற்றியை உறுதிப்படுத்துகிறது. கடந்த ஒரு மாதமாக வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும்போது மக்களால் கூறப்படும் வார்த்தையாகவும் இது விளங்குகிறது. புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் தியாகி குடும்பத்தைச் சேர்ந்தவர். 
  அரசியல் அனுபவமிக்கவர். மேலும் மாநிலத்தில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. ஆளுநர் கிரண் பேடி மக்கள் நலத் திட்டங்களை முடக்குவதில் குறியாக இருப்பதும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளதால், அவருக்கு எதிரான கருத்தும் நிலவுகிறது. மதவாத கொள்கையுடன், மேல்தட்டு ஆதிக்கசக்தியினர் ஆட்சியை மீண்டும் கைப்பற்றக் கூடாது என்பதும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் கருத்தாகவும் உள்ளது. இதுவரை 9 மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. இந்த தேர்தலில் வாக்குச் சேகரிக்க செல்லும் போது, தெரிவிக்கப்படும் மக்களின் கருத்துகள் காங்கிரஸின் வெற்றியை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. மாநில அரசு மீது மக்களுக்கு ஒருவித வருத்தம் இருந்தாலும், இது சட்டப் பேரவைத் தேர்தல் அல்ல, நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மக்களவைத் தேர்தல் என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.
  கடும் நிதி நெருக்கடி, சட்ட அதிகாரம் கொண்டோரின் நெருக்கடியையும் தாண்டி புதுச்சேரியில் நாராயணசாமி அரசு திட்டங்களை நிறைவேற்றிவருவதை மக்கள் புரிந்துள்ளனர். எனவே, காங்கிரஸ் வேட்பாளர் வி. வைத்திலிங்கம் ஒரு லட்சத்துக்கும் மிகுதியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என நம்பிக்கைத் தெரிவித்தார் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai