சுடச்சுட

  

  மத்திய அரசு புதுச்சேரிக்கு ரூ. 7,182 கோடிக்கு திட்டங்களைக் கொடுத்துள்ளது: கோகுலகிருஷ்ணன் எம்.பி. தகவல்

  By DIN  |   Published on : 17th April 2019 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மத்திய அரசு புதுச்சேரிக்கு ரூ. 7,182 கோடிக்கு திட்டங்களைக் கொடுத்துள்ளபோதும், ஒன்றுமே செய்யவில்லை என முதல்வர் நாராயணசாமி கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று மாநிலங்களவை உறுப்பினர் என். கோகுலகிருஷ்ணன் கூறினார். 
  காரைக்காலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே. நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவந்த மாநிலங்களவை உறுப்பினர் என். கோகுலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரியில் நாராயணசாமியின் கடந்த 3 ஆண்டு காலத்தில் மாநிலத்தில் எந்தவொரு வளர்ச்சியும் நடைபெறவில்லை. ஸ்மார்ட் சிட்டி, குடிநீர்த் திட்டம், சேதாரப்பட்டு ஜிப்மர் கிளை, சுற்றுலா, சாகர் மாலா துறைமுகத் திட்டம், கிழக்கு கடற்கரை ரயில்பாதை, காரைக்கால் - பேரளம் ரயில்பாதை, காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை, ரூசா திட்டத்தின் மூலம் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நிதி என மொத்தம் ரூ. 7,182 கோடி திட்டத்தை மத்திய அரசு புதுச்சேரிக்கு கொடுத்துள்ளது. ஆனால், மத்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை என நாராயணசாமி கூறுகிறார். இதை மக்கள் ஏற்கவில்லை என்பது வாக்குச் சேகரிப்பின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
  சுமார் 25 ஆண்டு காலம் புதுதில்லியில் கோலோச்சிய நாராயணசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத்தர முயற்சிக்கவில்லை. இப்போது, மாநில அந்தஸ்து குறித்துப் பேசுவதையும் மக்கள் ஏற்கப்போவதில்லை. ரங்கசாமி ஆட்சியில் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்கியது. நாராயணசாமி ஆட்சியில் அதற்கு மூடு விழா நடத்தப்பட்டது. காரைக்காலில் ஜிப்மர் கிளை அறிவித்த 10 மாதத்தில் செயல்பட வைத்தது ரங்கசாமி அரசு. என்ஐடிக்குத் தேவையான நிலத்தையும் ரங்கசாமி அரசு உடனடியாக கொடுத்தது. இப்போது, காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சொற்ப நிலத்தைக்கூட புதுச்சேரி நாராயணசாமி அரசால் கொடுக்கமுடியவில்லை. 
  கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.10 கோடி வீதம் பேரிடர் நிதியை மத்திய அரசிடமிருந்து புதுச்சேரிக்கு பெற்றுக் கொடுத்துள்ளேன். ஜிப்மரில் 839 பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுத்தேன். நாராயணசாமி ஆட்சியில் குடிநீர் வரி, வீட்டு வரி பல மடங்கு உயர்ந்துள்ளது. தெருவில் கிடக்கும் குப்பைகளை அள்ளக்கூட வீட்டு உரிமையாளர் கட்டணம் செலுத்த வேண்டிய அவலம் இந்த ஆட்சியில் உள்ளது. நாராயணசாமி தமது நிர்வாகத் திறமையை மறைக்க ஆளுநர் மீது பழி போடுகிறார். மத்தியில் மோடி ஆட்சி, புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சி இருந்தால் மட்டுமே மக்கள் நலத் திட்டம் செயல்படுத்த முடியும், வளர்ச்சி இருக்கும் என மக்கள் நம்புகின்றனர். எனவே, இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே. நாராயணசாமி வெற்றி பெறுவது உறுதியான ஒன்று என்றார் எம்.பி. கோகுலகிருஷ்ணன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai