சுடச்சுட

  

  வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

  By DIN  |   Published on : 17th April 2019 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மக்களவைத் தேர்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என  மாவட்ட தேர்தல் அதிகாரி ஏ. விக்ரந்த் ராஜா கூறினார்.
  காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பார்வையாளர் (பொது)  பிரசன்ன ராமசாமி தலைமையில் தேர்தல் துறையின் அனைத்து நோடல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஏ. விக்ரந்த் ராஜா கலந்துகொண்டு, நோடல் அதிகாரிகளின் பணிகள் குறித்தும், மாவட்டத்தில் தேர்தல் நடத்த செய்திருக்கும் ஏற்பாடுகள் குறித்தும் விளக்கிக் கூறினார்.
  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் 164 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதி, முதியோர், மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்குள் செல்ல சாய்வுதளம் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள ரசீதான பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த ஆவணங்களை வாக்குச் சாவடிக்கு கொண்டு செல்லலாம் என்பது குறித்தும் விளக்கம் தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 23 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 23 வாக்குச் சாவடிகளும் கேமரா மூலம் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பாதுகாப்புக்காக காவலர்கள் பணியமர்த்தப்படுவார். துணை ராணுவத்தினரும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். எனவே, பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகளை செலுத்தலாம். 
  காரைக்காலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு அவசியம் என்பதை வலியுறுத்தி தீவிரமான விழிப்புணர்வுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, அனைத்து வாக்காளர்களும் வாக்குப் பதிவு செய்ய தேர்தல் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி, சி-விஜில் என்ற செயலியின் மூலம் தெரிவிக்கலாம். 
  ஒட்டுமொத்தத்தில் காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன என்றார்
  விக்ரந்த் ராஜா.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai