காரைக்காலில் கோடைகால நுண்கலைப் பயிற்சி 25-இல் தொடக்கம்
By DIN | Published On : 21st April 2019 01:03 AM | Last Updated : 21st April 2019 01:03 AM | அ+அ அ- |

காரைக்கால் பகுதி மாணவர்களுக்கு கோடை கால நுண்கலைப் பயிற்சி ஏப்ரல் 25-ஆம் தேதி தொடங்குகிறது.
காரைக்கால் கல்வித் துறையின் ஜவஹர் சிறுவர் இல்லம் சார்பில் கோடைக் காலத்தில் மாணவர்கள் பயனடையும் வகையில் பரதம் உள்ளிட்ட நடனம், ஓவியம், கீ -போர்டு, கராத்தே, யோகா, வீணை, வாய்ப்பாட்டு, தையல், கூடைப் பின்னுதல் உள்ளிட்ட நுண்கலைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் 5 முதல் 16 வயதுள்ள மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். காரைக்கால் மற்றும் திருநள்ளாறு என 2 மையங்களில் ஒரு மாத காலம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இரு மையங்களிலும் சுமார் 300 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தலும் முடிந்துவிட்டது. எனவே, இந்த பயிற்சியை விரைவாக தொடங்கவேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி சனிக்கிழமை கூறியது: கோடைக்கால நுண்கலைப் பயிற்சி ஏப்ரல் 25-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. என்னென்னப் பயிற்சி அளிக்கப்படும், பங்கேற்க விரும்புவோர் எங்கு விண்ணப்பிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடுத்த ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்றார் அவர்.