39 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடக்கம்

காரைக்கால்-பேரளம் அகல ரயில் பாதை திட்டத்தையொட்டி, ரயில் பாதைகளை சுத்தம் செய்யும் பணியை

காரைக்கால்-பேரளம் அகல ரயில் பாதை திட்டத்தையொட்டி, ரயில் பாதைகளை சுத்தம் செய்யும் பணியை 39 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே நிர்வாகம் சனிக்கிழமை தொடங்கியுள்ளது.
காரைக்கால்- திருநள்ளாறு-  பேரளம் வரையிலான 23 கி.மீ. ரயில் போக்குவரத்து 1980-ஆம் ஆண்டுவாக்கில் நிறுத்தப்பட்டு, தொடர்ந்து தண்டவாளங்களும் அகற்றப்பட்டன. ரயில்வே நிர்வாகத்திடம் அதற்கான நிலம் மட்டும் 39 ஆண்டுகளாக இருந்துவருகிறது. நாகூர் முதல் காரைக்கால் வரையிலான அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து கடந்த சில ஆண்டுளுக்கு முன்பு தொடங்கியது முதல், காரைக்கால்- திருநள்ளாறு- பேரளம் வரையிலான ரயில் பாதையை அகல ரயில் பாதையாக அமைத்து, ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்திவந்தனர்.ற
முந்தைய நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, காரைக்கால்- பேரளம் அகல ரயில் பாதை பணிக்கு முழுமையான அனுமதியைத் தந்தது. இதையொட்டி, திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு  ரயில்வே வாரியம் ரூ.177.69 கோடி ஒப்புதல் தெரிவித்த நிலையில், காரைக்கால் - பேரளம் மற்றும் நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி ஆகிய இரு திட்டங்களுக்கும் சேர்த்து நிகழாண்டு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டப்பணி தொடங்கும் வகையில், டெண்டர்களை ரயில்வே நிர்வாகம் கோரியுள்ளது. ரூ.116 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளிகளை ரயில்வே நிர்வாகம் கோரியதோடு, இந்த திட்டப்பணிகளை ஓராண்டுக்குள் முடிக்கும் வகையில், 23 கி.மீ. தூரப் பணியை 4 தனித்தனி ஒப்பந்ததாரர்கள் மூலம் நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டம் நிறைவேற்றப்படும்போது, நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் நேரடியாக திருநள்ளாறுக்கு பக்தர்கள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். 
குறிப்பாக ரயில்பாதை அமைப்புப் பணிக்குத் தேவையான மணல் தருமாறு ரயில்வே நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தை கோரியுள்ளது.  திருநள்ளாறு பகுதியில் உள்ள நல்லம்பல் ஏரியை ஆழப்படுத்தும் திட்டம் உள்ளதால், அதிலிருந்து மணல் தருவதற்கு தயாராக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே காரைக்கால்  - பேரளம் ரயில் பாதை அமைப்புத் திட்டம் தொடங்குவதற்கான பாதைகள் திறக்கப்பட்டுவிட்டது உறுதியாகியுள்ளது.
காரைக்கால்- திருநள்ளாறு வழி பேரளம் வரையிலான பாதையில் ஆக்கிரமிப்பு, கருவேல மரங்கள் வளர்ந்து ரயில் பாதையே தெரியாத நிலையில் இருக்கிறது. இவற்றை அகற்றி சீர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. காரைக்கால் நகரப் பகுதியிலிருந்து ரயில்பாதையில் உள்ள கருவேல மரங்கள் அழிப்பு, குப்பைகள் அகற்றம் போன்ற சீரமைப்புப் பணிகளை ரயில்வே நிர்வாகம் ஜேசிபி இயந்திரங்களை வைத்து சனிக்கிழமை முதல் செய்துவருகிறது. ரயில்வே வட்டாரத்தில் இதுகுறித்து கூறும்போது, ஒப்பந்ததாரர் பணியை செய்ய வரும்போது, அதற்கான நிலத்தை சரிசெய்து ஒப்படைக்க வேண்டியுள்ளதால், அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன என்றனர்.
காரைக்கால்- பேரளம் வழித்தடம் நிறைவேற்றப்பட்டால், காரைக்காலில் இருந்து சென்னைக்கு செல்லும் பயண தூரம் இரண்டரை மணி நேரம் குறையும். திருச்சி ரயில்வே கோட்டத்தில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் பயணிகள் வருவாய் 10.16 சதவீதம் உயர்ந்துள்ளதோடு, சரக்குப் போக்குவரத்து மூலம் 37.5 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது. இதற்கு காரைக்கால் துறைமுகத்தின் மூலம் நிலக்கரி ஏற்றுமதியே முக்கியக் காரணம். எனவே காரைக்கால் திட்டத்தின் மீது ரயில்வே நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com