அரசுத் துறைகள் சார்பில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை

காரைக்காலில் கடற்படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், அரசுத்துறைகள் சார்பில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் கடற்படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், அரசுத்துறைகள் சார்பில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகம், புதுச்சேரி அரசுகள் இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து ஆகஸ்ட் 2 முதல் 5 -ஆம் தேதி வரை இயற்கை பேரிடர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டன.
 அதன் ஒரு பகுதியாக புதுத்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை, பள்ளி வாசல், தேவாலயம், தருமபுரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒத்திகை நடைபெற்றது. மருத்துவமனை மேல் தளங்களிலிருந்து நோயாளிகளைக் காப்பாற்றுவது, பள்ளியிலிருந்து மாணவர்களைக் காப்பாற்றுவது, பள்ளிவாசல், தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் தஞ்சமடைந்திருந்த பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, ஆறுகளில் படகுகள் மூலம் மக்களை மீட்டுச் செல்வது  உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த பகுதியில் அமைக்கப்பட்ட மருத்துவ மையத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ சிகிச்சை அளிப்பது, பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை மருந்தக ஊழியர்கள் சிகிச்சை அளிப்பது போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:  புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் வகையிலான ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பல்வேறு சூழல்களில் சிக்கித் தவித்த 200- க்கும் மேற்பட்டவர்கள் மீட்புக் குழுவால் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைப்பது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.  இதில் பங்கேற்ற அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து சிறப்பான பங்களிப்பை செய்திருந்தனர். உண்மையாக பாதிப்பு ஏற்படும்போது போது அரசு துறையினர், பொதுமக்கள் திறம்பட செயலாற்றும் வகையில் இந்த ஒத்திகை பயனுள்ளதாக அமையும் என்றார்.
ஒத்திகை நிகழ்ச்சிக்கு முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்திகை நடைபெறும் பகுதிக்குச் சென்றனர். ஒத்திகை நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com