சப்த கருட சேவைத் திருவிழா நிறுத்தம்: பக்தர்கள் வேதனை

காரைக்காலில் 8 ஆண்டுகளாக கருட பஞ்சமி நாளில் நடத்தப்பட்டுவந்த சப்த கருட சேவை நிகழாண்டு

காரைக்காலில் 8 ஆண்டுகளாக கருட பஞ்சமி நாளில் நடத்தப்பட்டுவந்த சப்த கருட சேவை நிகழாண்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்படாமல் நிறுத்தப்பட்டது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் கைலாசநாதர் வகையறா கோயில்களுக்குட்பட்டதாக  நித்யகல்யாணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் திவ்ய தேசங்கள் என கூறப்படும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்களில் நடத்தப்படும் விழாக்களைப்போல, கடந்த 15, 20 ஆண்டுகளுக்கிடையே பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டுவருகின்றன. 
அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு பெருமாள் கோயில்களில் நடத்தப்படும் கருட சேவைத் திருவிழாவைப்போல, காரைக்கால் பெருமாள் கோயில் சார்பில் நடத்த பக்த ஜன சபா ஏற்பாடுகளைச் செய்து கடந்த 8 ஆண்டுகளாக  ஆடி மாதத்தில்  கருட பஞ்சமி நாளில், காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் கோயில்கொண்டுள்ள 7 பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருள செய்யும்  நிகழ்ச்சியை நடத்திவருகிறது. 
நிகழாண்டு கருட பஞ்சமி நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 4) விழா நடத்துவதற்கு எந்தவொரு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. பக்த ஜன சபாவினருக்கும், கோயில் அறங்காவல் வாரியத்தினருக்குமிடையே நிலவும் கசப்பான மோதல்களே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனடிப்படையிலேயே ஆடிப்பூர விழாவில் ஆண்டாள் - பெருமாள் சேர்த்தி சேவை, வீதியுலா முறையாக நடத்தப்படவில்லை என்றும், கருட சேவையும் கைவிடப்பட்டுவிட்டதாகவும் விவரம் அறிந்தோர் கூறுகின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, நிகழாண்டு சப்த கருட சேவை விழா நிறுத்தப்பட்டது வேதனையளிக்கிறது. சபாவினர் ஒத்துழைப்பின்றி அறங்காவல் வாரியத்தினரால் பெருமாள் கோயிலில் திருவிழா நடத்துவது சாத்தியமில்லை. திருவிழாக்கள் நடத்த வாரியத்தினரின் ஒத்துழைப்பும் அவசியம். எனவே இருவரும் தங்களுக்கிடையேயான கசப்புகளை தள்ளிவைத்துவிட்டு, திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்றனர். 
இதுகுறித்து கைலாசநாதர் - நித்யகல்யாணப் பெருமாள் கோயில் அறங்காவல் வாரிய செயலாளர் எம்.பக்கிரிசாமி ஞாயிற்றுக்கிழமை கூறியது:  நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பக்த ஜன சபாவினர், உபயதாரர்களை அழைத்துப் பேசினோம். கருட  சேவைத் திருவிழா முழுக்க பக்தஜன சபாவினர் ஏற்பாட்டில் செய்யக்கூடியதாகும். அவர்கள்  முன்கூட்டியே இதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. கருட பஞ்சமி நாளில் கருட சேவைத் திருவிழா நடத்தாவிட்டாலும், பிறகொரு நல்ல நாளில் நிகழ் மாதத்திலேயே இத்திருவிழாவை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வாரியம் வழங்கும் என கூறியுள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com