சுடச்சுட

  

  கைவிடப்பட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகளின் சைக்கிள் ரோந்துப் பணி: மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? 

  By DIN  |   Published on : 15th August 2019 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் நகரம் மற்றும் கிராமப்புறங்களை தேர்வு செய்து ஆட்சியர், காவல் அதிகாரிகள் சைக்கிளில் ரோந்து நடத்தப்பட்டு வந்ததன் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்ததாகவும், இந்தத் திட்டத்தை அதிகாரிகள் தற்போது கைவிட்டுவிட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
  புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்ற பின்னர், புதுச்சேரி பிராந்தியத்தில் அவ்வப்போது சைக்கிளில் நகர, கிராமப்புறங்களுக்கு அதிகாரிகளுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு, பிரச்னைகளை அறிந்து தீர்வு காணத் தொடங்கினார். இதேபோல, காரைக்காலிலும் ஆட்சியர், காவல் துறையினர் பங்களிப்புடன் நகரம் மற்றும் ஒவ்வொரு கிராமங்களிலும் வாரத்தில் ஒரு நாள் ரோந்துப் பணி செய்து, மக்களின் பிரச்னைகளை அறிந்து தீர்வு காண அறிவுறுத்தினார்.
  அதன்படி, காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர்.கேசவன் தலைமையில், நகராட்சி, பொதுப்பணித் துறை, காவல் அதிகாரிகள் பங்களிப்போடு சைக்கிள் ரோந்து மேற்கொள்ளப்பட்டு, பிரச்னைகள் கண்டறியப்பட்டன. பொதுமக்கள் தாமாக முன்வந்து அதிகாரிகளிடம் அப்பகுதியில் நிலவும் பிரச்னைகளைத் தெரிவித்தனர். இதனால் ஆட்சியர் அதே இடத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்ததால், பல்வேறு பிரச்னைகள் தீர்வுக்கு வந்தன.
  இதேபோல, காவல் துறையினர் தனியாக சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். காவல் நிலையத்துக்குச் சென்று பொதுமக்கள் சில பிரச்னை தொடர்பாக புகார் தெரிவிக்க அச்சப்படும் நிலை, இதன் மூலம் தெளிவடையுமெனக் கூறி போலீஸார் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
  இதற்காக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால், திருப்பட்டினம், நிரவி, கோட்டுச்சேரி, நெடுங்காடு காவல் நிலையங்களுக்கு தலா 4 சைக்கிகள் வீதம் 20 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. வாரத்தில் ஒரு நாள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில், போலீஸார் கிராமப் பகுதிகளுக்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அதேபோல் பீட் போலீஸார் ஒரு நாள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சைக்கிளில் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டனர்.
  குறிப்பாக வழிபறி, திருட்டு, குழுவினரிடையே ஏற்படும் தகராறு போன்ற பல்வேறு பிரச்னைகளை தடுக்கவும், காவல்துறையினர் மீது பொது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் அமைந்தது. சைக்கிளில் போலீஸார் செல்லும்போது, மக்களுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. திட்டம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே ஆட்சியர், காவல் துறையினர் ரோந்துப் பணிகளை கைவிட்டனர். 
  காரைக்காலில் மாதம் இரண்டு முறை ஆட்சியரகத்தில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 25 பேர் வரை மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டு புகார்களை தெரிவிக்கின்றனர். கூட்டம் அதிகமாக வருவதில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. அதே வேளையில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போதுமக்கள் வரவேற்பு தெரிவித்து புகார்களை தெரிவித்து வந்தனர்.
  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ரோந்துப் பணியில் ஈடுபடும்போது, மக்கள் ஆர்வமாக வந்து அதிகாரிகளைச் சந்தித்து புகார் தெரிவிப்பதும், சாலை சீர்கேடு, மின்சாரப் பிரச்னை, கழிவுநீர் பிரச்னை, ஆக்கிரமிப்பு, பேருந்து நிறுத்தாமல் போகும் பிரச்னை, பள்ளிகளில் நிலவும் குறைபாடு உள்பட பல்வேறு பிரச்னைகளை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்ல முடிந்தது. குறிப்பாக முன்பு ஆட்சியராக இருந்த கேசவன், ஒரு வாரத்தையும் விடாமல், ஒவ்வொரு கிராமமாக தேர்வு செய்து ரோந்துப் பணியில் ஈடுபட்டார். 
  பிரச்னைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தார். என்ன காரணத்தினாலோ ஆட்சியர், காவல் அதிகாரிகளின் ரோந்துப் பணிகள் ஓராண்டுக்கும் மேலாக கைவிடப்பட்டிருக்கிறது.
  எனவே, மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆட்சியரகத்துக்கு நேரடியாகவும், அமைச்சர், எம்.எல்.ஏ.க்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. எளிய முறையில் பிரச்னைகளை நேரில் அறியும் வாய்ப்பாக அதிகாரிகளுக்கு அமைந்த ரோந்துப் பணியை மீண்டும் தொடங்க வேண்டும். 
  இதன் மீது காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி, வாரம் ஒரு நாள் ஆட்சியர் சைக்கிள் ரோந்தும், தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காவல் துறையினர் ரோந்துப் பணியும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai