காரைக்காலில் 1 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன: ஆட்சியர்

மாவட்டத்தில் இதுவரை 1 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா தெரிவித்தார்.

மாவட்டத்தில் இதுவரை 1 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் அரசுத்துறை, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கோயில் நிர்வாகங்கள் மூலமாக மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
குளங்கள் தூர்வாரப்படுவதோடு, குளக்கரையில் சுமார் 50 மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெறுகிறது. அரசு பொதுமருத்துவமனை சார்பில், கீழகாசாக்குடி பகுதியில் தோப்புக்குளம் தத்தெடுக்கப்பட்டு தூர்வாரும் பணி கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி, குளக்கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மரக்கன்று நடும் பணியைத் தொடங்கிவைத்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியது : மாவட்டத்தில் இதுவரை 50 குளங்கள் தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் சில நாள்களில் 50 குளங்களைத் தூர்வாரி முடிக்கும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. மேட்டூர் அணை திறக்கப்பட்டு காவிரித் தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், காரைக்கால் எல்லையை நெருங்குவதற்குள் நீர்நிலைகளைத் தூர்வாரி முடித்துவிட சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை காரைக்காலில் தூர்வாரப்பட்ட குளங்களில் 1 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். மேலும் குளங்களை தூர்வாரி முடிக்கும்போது தேக்கிவைக்கும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும். அதுபோல வாய்க்கால்களைத் தூர்வாருவதிலும் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.
காவிரி நீர் வரும்போதும், பருவமழையின்போது கிடைக்கும் தண்ணீரையும் பொதுமக்கள் அவரவர் பகுதி நீர்நிலைகளில் சேமித்து வைக்க முன்வரவேண்டும். நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவது, கழிவுகளை விடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அரசுத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகத்தினர்  நம் நீர் திட்டம் வெற்றிபெற பாடுபடுகின்றனர். 
பொதுமக்கள் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சித்ரா, உள்ளிருப்பு மருத்துவ 
அதிகாரி (பொறுப்பு) மதன்பாபு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜி.பக்கிரிசாமி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com