ஜிப்மர் வாராந்திர முகாம் நிறுத்தம்: முதல்வரிடம் தெரிவித்திருப்பதாக அமைச்சர் தகவல்

காரைக்காலில் உள்ள ஜிப்மர் (கிளை மருத்துவமனை) வாராந்திர சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்கும் முகாமை

காரைக்காலில் உள்ள ஜிப்மர் (கிளை மருத்துவமனை) வாராந்திர சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்கும் முகாமை தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்யுமாறு, புதுச்சேரி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக புதுச்சேரி மாநில வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் தொலைதூர சேவையாக காரைக்காலில் கடந்த 10 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் இருதயம், நரம்பியல், புற்றுநோய்,  ஹார்மோன் குறைபாடு, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவர்கள் வந்து, அரசு பொது மருத்துவமனையில் முகாம் நடத்தி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் நடைபெற்று வந்த இந்த முகாம் மூலம் சுமார் 100 பேர் வரை பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக புதுச்சேரி ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் வருகை, முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகள் மருத்துவமனைக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
காரைக்காலில் ஜிப்மர்  நிதியில் அரசு பொது மருத்துவமனை மேம்பாடு செய்யப்படுகிறது. பின்னர், ஜிப்மர் மருத்துவர்கள் இங்கு பணியாற்ற வாய்ப்புள்ளது. அதுவரை வாராந்திர முகாம் நடைபெறவேண்டும். இதன்மீது,  அமைச்சர், ஆட்சியர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா, ஜிப்மர் இயக்குநருக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஏற்கெனவே தெரிவித்தார். இதுகுறித்து, வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணனை புதன்கிழமை தொடர்புகொண்டு கேட்டபோது, ஜிப்மர் முகாம் 2 வாரங்களாக நடைபெறாதது கவனத்துக்கு வந்தது. உடனடியாக புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமியிடம் முகாம் தொடர்ந்து நடைபெற ஜிப்மர் இயக்குநரிடம் பேசி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். இதன் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com