பாலியல் வன்கொடுமை: மேலும் இருவர் கைது

காரைக்காலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

காரைக்காலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த  48 வயது பெண் ஒருவர் சாலையோரத்தில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 17-ஆம் தேதி இரவு காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நின்றபோது லோடு ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்று, கத்தி முனையில் மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அவரிடமிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை பறித்துக்கொண்டு தப்பினர்.
 நகரக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி கடலூரில் இருந்த ராஜ்குமார் (19), காரைக்கால் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையோர் நாகை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் பதுங்கி இருப்பதாக சிறப்பு அதிரடிப்படை பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிரடிப்படை பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் மற்றும் போலீஸார் அங்கு சென்று 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில் காரைக்கால் தோமாஸ் அருள்வீதியை சேர்ந்த ராம் (எ) ராம்குமார் (20) என்பதும், மற்றொருவர் சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மினி லோடு ஆட்டோ மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் காரைக்கால் சார்பு கோட்ட  நீதிபதி ஆதார்ஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இது குறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர்  மகேஷ்குமார் பன்வால் கூறும்போது, காரைக்காலில் நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மிக விரைவாக  செயல்பட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை பிரிவு போலீஸாருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். பேட்டியின்போது மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, வீரவல்லபன் உள்ளிட்ட போலீஸார் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com