முஸ்லிம் நலத்திட்டங்கள்: எம்.எல்.ஏ.வுடன் ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு

புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்கள் நலனுக்கான திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த, பட்ஜெட்

புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்கள் நலனுக்கான திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த, பட்ஜெட் கூட்டத்தொடரில் வலியுறுத்துமாறு சட்டப் பேரவை உறுப்பினரிடம் ஜமாஅத் சார்பில் வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 
 காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனாவை, காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் தலைமை ஒருங்கிணைப்பாளர் முஹம்மது யாசின் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர். அவரிடம் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் வலியுறுத்த வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அதில் கூறியிருப்பது : அரசு வேலைவாய்ப்புகளில் புதுச்சேரி அரசால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 2 சதவீத  இட ஒதுக்கீட்டில் குரூப் ஏ மற்றும் பி பிரிவுகளில் இஸ்லாமியர்களுக்கு முறையாக ஒதுக்கீடு வழங்க வேண்டும்.   தற்போதுள்ள 2 சதவீத ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களின் மக்கள் தொகைக்கேற்ப உயர்த்தி வழங்க வேண்டும். சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்படும் அரசு கடன்கள் முறையாக வழங்கப்பட வேண்டும்.  நகரம் மற்றும் கிராம முன்னேற்றத்திற்காக அரசு அமைக்கும் சுய உதவி குழுக்கள் உள்பட அனைத்து குழுக்களிலும் இஸ்லாமியர்கள் பங்கெடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களை அடக்கம் செய்ய  சிறுபான்மையின மக்களுக்கு தேவையான அளவில் அடக்கத்துக்கான இடத்தையும், அதற்கான அனுமதியும் அரசு வழங்க வேண்டும்.  புதுச்சேரி மாநிலத்தில் வக்ஃபு வாரியம் மற்றும் ஹஜ் கமிட்டிக்கான நிர்வாகத்தை அரசு உடனடியாக அமைக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 6 அரபு ஆசிரியர் காலியிடங்களில் ஒரு முறை பணி அமர்வு விதியைத் தளர்வு செய்து நிரந்தர அரபு ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். புதுச்சேரியில் சிறுபான்மையினர் நல ஆணையம் உருவாக்கி, அதற்கான நிர்வாகிகளையும் நியமிக்க வேண்டும்.  அரபு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கணினி போன்ற சாதனங்கள் வழங்க வேண்டும்.  கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைககள் அதில் இடம்பெற்றுள்ளன.
இதுதொடர்பாக பேரவைக் கூட்டத் தொடரில் பேசுவதோடு, முதல்வர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடமும் பேசி நடவடிக்கை எடுப்பதாக பேரவை உறுப்பினர் கூறியதாக சந்திப்பில் பங்கேற்றோர் தெரிவித்தனர். 
இச்சந்திப்பின்போது துணை ஒருங்கிணைப்பாளர் ஒய்.அபுல் அமீன், மக்கள் தொடர்பாளர் எம்.சி.சமீர் அஹமது அல்ஃபாசி, ஒருங்கிணைப்பாளர்கள்  எம்.ஷேக் அலாவுதீன், ஒய்.யாசிர் கடாஃபி, எம்.அப்துல் பாசித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com