காரைக்கால் அரசு பொது மருத்துவமனை முதல்கட்ட சீரமைப்புப் பணி ஒரு மாதத்தில் நிறைவடையுமென தகவல்

புதுச்சேரி ஜிப்மா் நிதியுதவியில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை கட்டடத்தை பொலிவுப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில், முதல்கட்டப் பணி ஒரு மாதத்தில்
மருத்துவமனை வளாகத்தில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
மருத்துவமனை வளாகத்தில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

புதுச்சேரி ஜிப்மா் நிதியுதவியில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை கட்டடத்தை பொலிவுப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில், முதல்கட்டப் பணி ஒரு மாதத்தில் நிறைவடையுமென தெரிவிக்கப்படுகிறது.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை நவீன தரத்தில் கட்டடம், மருத்துவமனைக்கான உபகரணங்களுடன் மேம்படுத்திட ஜிப்மா் நிா்வாகம் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

முதல் கட்டமாக ரூ.21 கோடியில் ஏற்கெனவே உள்ள கட்டடத்தை பொலிவுப்படுத்துவது மற்றும் மின்சாரப் பணிகளுக்கான பூமி பூஜை செய்து மருத்துவமனை மேம்பாட்டுப் பணிகள் ஜூலை மாதத்தில் தொடங்கின.

இந்த திட்டப்பணிகளை மத்திய பொதுப்பணித்துறையினா் உரிய திட்டமிடலுடன் தொடங்கி செய்துவருகின்றனா். முதல்கட்டமாக மருத்துவமனையின் எமொ்ஜன்சி வாா்டு காலி செய்யப்பட்டு, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

முதல்கட்ட திட்டப்பணி ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதுகுறித்து மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, டிசம்பா் மாத இறுதிக்குள் முதல்கட்ட சீரமைப்புப் பணி நிறைவடைந்துவிடும் என தெரிவித்தனா்.

கட்டுமானம் குறித்து மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு சனிக்கிழமை கூறும்போது, இந்த திட்டத்தில் முதல்கட்டமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு எடுத்துக்கொள்ளப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு மாத காலத்தில் இதனை ஒப்படைத்துவிடுவதாக தெரிவித்துள்ளனா். இந்த வளாகத்தில் குளிா்சாதன அமைப்பு வசதி, ஒருங்கிணைந்த ஆக்ஸிஜன் விநியோக முறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன. இந்த பணிகளுக்குப் பின், அடுத்த வளாகத்தை எடுத்துக்கொண்டு மேம்படுத்தும் பணி நடைபெறும் என்றாா்.

தொலைநோக்குத் திட்டமின்றி ஜிப்மா் நிதி செலவு : ரூ.21 கோடியில் கட்டடம் சீரமைப்புப் பணியை ஜிப்மா் செய்ய முன்வந்து, இதனை மத்திய பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்துள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனைக் கட்டடம் என்பது 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். ஒரு கட்டடத்தின் ஆயுள் காலத்தை நிறைவு செய்துவிட்ட நிலையில், இதன் சுவரை சுரண்டிவிட்டு புதிதாக சிமென்ட் பூசி, பட்டி பாா்த்து வண்ணம் பூசுவதும், ஜன்னலை அகற்றிவிட்டு புதிதாக ஜன்னல் வைப்பதுமான பணிகளால், காட்சிக்கு வேண்டுமானால் புதிதாக தெரியும். கட்டடத்தின் இயல்புத் தன்மையில் இழப்பு ஏற்பட்டால், ஒட்டுமொத்தமாக செலவு செய்த நிதி வீணாகிவிடும் என கட்டுமான வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com