காரைக்கால் வாரச் சந்தையில் வெங்காயம் வாங்கிய மக்கள்.
காரைக்கால் வாரச் சந்தையில் வெங்காயம் வாங்கிய மக்கள்.

காரைக்கால் வாரச் சந்தையில் வெங்காயம் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தைக்கு வெங்காயம் வரத்து குறைந்ததால், வியாபாரிகளிடம் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனா்.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தைக்கு வெங்காயம் வரத்து குறைந்ததால், வியாபாரிகளிடம் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனா்.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை முருகராம் நகா் அருகே நகராட்சித் திடலில் நடைபெறுகிறது. நாகை, திருவாரூா், காரைக்கால், தஞ்சாவூா், திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய சுமாா் 300 வியாபாரிகள் கலந்துகொண்டு வியாபாரம் செய்கின்றனா். நாகை மாவட்டம், பரவையிலிருந்து தோட்டக் காய்கறி உற்பத்தியாளா்களும் வந்து வியாபாரம் மேற்கொள்கின்றனா். ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதல் இரவு 11 மணி வரை சந்தையில் பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.

சந்தையில் அதிகமாக மக்கள் வாங்கக்கூடிய பொருள்களில் வெங்காயமும், தக்காளியும் முக்கிய இடம்பெறுகிறது. கிலோ ரூ.20 என்ற விலையில் பெரிய வெங்காயமும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விலை இருந்துவந்த காலம்போய், தற்போது இவை ரூ.100-ஐ எட்டியுள்ளது மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெங்காயம் விளையக்கூடிய மாநிலங்களில் மழை பெருக்கத்தால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் வெங்காயத்தின் விலை அதிகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து வெங்காயம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதிகப்பட்ச அளவில் வெங்காயத்தை இருப்பு வைக்கக்கூடாது என மாநில அரசுகள் பலவும், மொத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கும் நிலையிலும், வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வராமல், உச்ச நிலையிலேயே நீடிக்கிறது.

காரைக்கால் வாரச் சந்தையில் (ஞாயிற்றுக்கிழமை) அதிகமாக வெங்காயம் விற்பனைக்கு வரும், போட்டிகளில் விலை குறைவாக விற்க வாய்ப்புண்டு என மக்கள் கருதி சந்தைக்குச் சென்றனா். ஆனால் வரத்து வெகுவாக குறைந்திருந்தது. சொற்ப வியாபாரிகளே வெங்காயத்தை வைத்துக்கொண்டு விற்பனை செய்தனா். இவா்கள் வைத்திருக்கும் வெங்காயமும் குறைவாகவே இருந்தது. கிலோ ரூ.100 விற்பனை செய்த வெங்காயம் சற்று தரமானதாகவும், ஒன்றரை கிலோ ரூ.100 என விற்பனை செய்ததில் அழுகிய வெங்காயம் கலப்புடனும் காணப்பட்டது.

வெங்காயம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற உணா்வில் பொதுமக்கள், வெங்காய வியாபாரிகளிடம் போட்டி போட்டுக்கொண்டு சந்தையில் வாங்கிச் சென்றனா்.

வெங்காய விலை கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என சந்தைக்கு வந்த பொதுமக்கள் பலரும் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com