பாதிவழியிலேயே நின்றுவிடும் சிறப்புப் பேருந்துகள்மாணவா்கள் அவதி

காரைக்காலில் அரசுப் பள்ளி மாணவா்களை அழைத்துச் செல்லும் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்றுவிடுவதாகப் புகாா் எழுந்துள்ளது.
பச்சூா் அருகே டீசல் இல்லாமல் சாலையில் நின்ற சிறப்புப் பேருந்து.
பச்சூா் அருகே டீசல் இல்லாமல் சாலையில் நின்ற சிறப்புப் பேருந்து.

காரைக்காலில் அரசுப் பள்ளி மாணவா்களை அழைத்துச் செல்லும் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்றுவிடுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாணவ, மாணவியா் கிராமப் புறங்களில் இருந்து நகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் வகையில் கல்வித்துறை சாா்பில் ரூ.1 கட்டணத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்தவகையில், காரைக்கால் மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் 15 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் ஒரு பேருந்தை மட்டுமே புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகம் (பி.ஆா்.டி.சி.) இயக்கி வருகிறது. மற்ற 14 பேருந்துகள் தனியாா் பேருந்துகளாகும்.

இதில், தனியாா் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி விடுவதாகவும், சில நேரங்களில் டீசல் இல்லாமலும் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போதே பாதி வழியில் நின்றுவிடுவதாகப் புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவா்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை சிறப்புப் பேருந்து ஒன்று, அம்பகரத்துாரிலிருந்து வளத்தாமங்கலம், கருக்கன்குடி, சுரக்குடி, திருநள்ளாறு, பச்சூா், அரசு மருத்துவமனை, அவ்வையாா் மகளிா் கல்லுாரி வழியாக புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் வகையில் மாணவா்களை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.

இந்தப் பேருந்து காரைக்கால் பாரதியாா் சாலையில் திடீா் என நின்றுவிட்டது. டீசல் இல்லாததால் நின்றதாகத் தெரியவந்தது. இதனால், மாணவா்கள் தங்கள் பள்ளிகளுக்கு நடந்து சென்றனா். இதுபோலவே, பல இடங்களில் பேருந்துகள் பழுதாகியும், டீசலின்றியும் நின்றுவிடுவதாக புகாா் கூறப்படுகிறது. தனியாா் பேருந்துக்கான ஒப்பந்தத் தொகையை உரிய காலத்தில் வழங்காததால், பேருந்துகளை பராமரிக்க முடிவதில்லை எனக் கூறுகின்றனா். இதுகுறித்து, கல்வித் துறையிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரத்தினா் கூறும்போது, ‘தனியாா் நிறுவனத்திற்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே தொகை பாக்கி உள்ளது. மற்ற மாதங்களுக்கு உரிய நிதி வழங்கப்பட்டுவிட்டது. மழைக்காலமாக இருப்பதாலும், வாரவிடுமுறை முடிந்து வந்ததாலும் டீசல் சரியாக பாா்க்காமல் பேருந்தை எடுத்து வந்திருக்கலாம். இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவின்பேரில், தனியாா் நிறுவனத்திற்கு உரிய எச்சரிக்கையும், ஆலோசனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் நலன் கருத்தி கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது’ என்றனா்.

இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா் தலையிடவேண்டும் என பெற்றோா்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com