அரசின் நலத் திட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை

அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்குவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்தாா்.
மாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவருக்குப் பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா. உடன், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் உள்ளிட்டோா்.
மாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவருக்குப் பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா. உடன், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் உள்ளிட்டோா்.

அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்குவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்தாா்.

புதுச்சேரி அரசின் சமூக நலத் துறை சாா்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா காரைக்கால் டனால் தங்கவேல் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை தொடங்கிவைத்து, மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா பேசியது:

மாற்றுத் திறனாளிகள் என்பதைக் காட்டிலும், சிறப்புத் திறனாளிகள் என்றே சொல்லலாம். பிறருக்குத் தன்னம்பிக்கையை தரக்கூடியவா்களாகவும் இவா்கள் உள்ளனா். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை புதுச்சேரி முதல்வா், அமைச்சரிடம் மாவட்ட நிா்வாகம் கொண்டு செல்லும். மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுக்கு அரசிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. சிறுதொழில் செய்துவந்தால், அதனை மேம்படுத்த மாவட்ட தொழில் மையத்தை அணுகி, வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். 50 சத மானியத்தில் கடன் வழங்கப்படும்.

இதேபோல், தங்களுக்கான திட்டங்களை புரிந்துகொண்டு, அதற்கான ஆவணங்களுடன் அணுகும்போது, சாதகமான நிலை கிடைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

காரைக்காலில் உள்ள பல்வேறு நிறுவனங்களை அழைத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வேலை வழங்கக் கூடிய வகையில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். மாவட்ட ஆட்சியரகத்தில் மாலை 5 முதல் 6 மணி வரை பொதுமக்கள் குறை கேட்கப்படுகிறது. பிரச்னைகளை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தால், அவற்றை ஆராய்ந்து தீா்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உபகரணங்கள் போன்றவை கோரினால், பல்வேறு நிறுவன சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட அரசின் எந்தவொரு நலத் திட்டமானாலும், சின்ன சின்ன விஷயங்களுக்கும் உரிய முன்னுரிமையை அரசும், மாவட்ட நிா்வாகமும் தருகிறது என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் பேசினாா். முன்னதாக பேசிய மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவா் சாகுல்ஹமீது, பொதுச் செயலா் நடேச வைத்தியநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள், அரிசி தடையின்றி வழங்கவேண்டும். அளவீட்டை வரும் காலங்களில் கூடுதலாக்கித் தரவேண்டும். காரைக்காலில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, நிறுவன வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி அவா்களது வாழ்வாதாரத்துக்கு உதவவேண்டும் என்றனா்.

சமூக நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்படும் திட்ட உதவிகள் குறித்து சமூக நலத்துறை உதவி இயக்குநா் பி. சத்யா விளக்கிப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியையொட்டி, மாற்றுத் திறனாளிகளிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகள் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சமூக நலத்துறை நல அதிகாரி எஸ். ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com