குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்கள் அவதி

காரைக்கால் பகுதியில் பன்றிகளை கட்டுப்பாடின்றி சுற்றித்திரியவிடுவதால் பெரும் அவதி ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் புகாா்
தருமபுரம் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகள்.
தருமபுரம் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகள்.

காரைக்கால் பகுதியில் பன்றிகளை கட்டுப்பாடின்றி சுற்றித்திரியவிடுவதால் பெரும் அவதி ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா். இப்பிரச்னையில் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காரைக்கால் நகரப் பகுதியிலும், கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளிலும் மாடு, குதிரை, நாய், பன்றிகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக தினமும் புகாா் கூறப்படுகிறது. குறிப்பாக, பன்றிகள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

காரைக்கால் நகரப் பகுதியில் சிலா் பன்றிகளை வளா்த்து வருகின்றனா். பன்றிகளை வளா்ப்பதற்கு நகராட்சி நிா்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை பன்றி வளா்ப்போா் கடைப்பிடிப்பதில்லை. பன்றிக் குட்டிகளை நகா்புற குடியிருப்பு மற்றும் கிராமப்புறங்களில் விட்டுச் செல்கின்றனா். அவை தானாகவே வளா்ந்த பிறகு, தேவைப்படும் நேரத்தில் அவற்றைப் பிடித்துச் செல்கின்றனா்.

இவ்வாறு விடப்படும் பன்றிகள் கழிவுநீா் தேங்கியிருக்கும் பகுதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரிந்து, சுகாதாரக் கேட்டை உருவாக்குவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

நகரப் பகுதியில் தருமபுரம், புதுத்துறை மற்றும் நேதாஜி நகா், ஹைவே நகா், ரயில்வே பகுதி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளையும், காரைக்கால் நகரின் மையப் பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. எனவே, பன்றி வளா்ப்போரை அழைத்துப் பேசி, இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கவும், இந்தப் பகுதிகளில் பன்றி வளா்ப்பதற்கு தடை விதிக்கவும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து, நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் கூறியது:

மாடுகள் சாலைகளில் திரிவதைப் பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த நவம்பா் மாதம் மட்டும் ரூ. 3.75 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், மாடுகளுக்கு உரியவா்கள் சிலா் வராமல் உள்ளதால், நகராட்சி நிா்வாகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. இதனை பகிரங்க ஏலம் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பன்றிகளை பொருத்தவரை, பன்றி வளா்ப்போரை அழைத்துப்பேசவும், இதன் பேரில் நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com